Published : 19 Feb 2015 11:14 AM
Last Updated : 19 Feb 2015 11:14 AM

சட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததால் திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சியினர் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், மு.க.ஸ்டாலின் (திமுக) எழுந்து சில பிரச்சினைகள் குறித்து பேச முயன்றார். ஆனால், அவருக்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி ஆகியோரும் பேசுவதற்கு அனுமதி அளிக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகத்தில் ஒரே ஒரு வனக்கல்லூரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது வனச்சரகர் பதவிக்கு அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பை பெற்றுவந்தனர். இப்போது, 25 சதவீத மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலை உள்ளது. இதைக் கண்டித்து வனக் கல்லூரி மாணவர்கள், கடந்த 16 நாட்களாக போராடி வருகின்றனர். சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த 14 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. ஆனால், இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால், மார்ச் 3-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த இரு பிரச்சினைகள் குறித்து பேச முயன்றபோது பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடம் மாற்றும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச முயன்றபோது, பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

வெளிநடப்பு செய்தது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறும்போது, ‘‘வனக்கல்லூரி மாணவர்கள் விவகாரம், சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், மோசமான சாலைகள் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்த பேச முயன்றேன். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x