முன்னாள் எம்.பி., ஆரூண் பையில் துப்பாக்கி குண்டுகள்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண் கைப்பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம், பெங்களூரு வழியாக மாலத்தீவு செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை, அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஜே.எம்.ஆரூண் அந்த விமானத்தில் பெங்களூரு செல்வதற்காக வந்தார். அவரது உடமைகளை அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். கைப்பையில் இருந்து அலாரம் ஒலித்தது. இதையடுத்து, அந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 5 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி அதிகாரிகள் கேட்டதற்கு, ‘எனது கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டுகள்தான். அதற்கான லைசென்ஸ் உள்ளது. தவறுதலாக பையை மாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்’’ என ஆரூண் கூறினார். லைசென்சை காட்டுங்கள் என அதிகாரிகள் கேட்டபோது, ‘துப்பாக்கி கொண்டு வராததால் லைசென்சை எடுத்து வரவில்லை. லைசென்ஸ் வீட்டில் உள்ளது' என்று பதிலளித்த அவர், வீட்டுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, உதவியாளர் மூலம் லைசென்சை கொண்டு வர செய்தார்.
அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பின் குண்டுகளை ஆரூணின் உதவியாளரிடம் அதிகாரிகள் கொடுத்து அனுப்பினர். இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்ய ஆரூணை அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால் அதற்குள் அவர் பயணம் செய்ய இருந்த விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது. அதனால் அவர் உள்நாட்டு முனையத்துக்கு வந்து காலை 8.30 மணிக்கு பெங்களூரு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
