

அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நேற்று முன் தினம் சென்னை வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலி தாவை அவரது போயல் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட் டாலும், அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், ஜெயலலிதா ஜேட்லி சந்திப்பு குறித்து ‘தி இந்து’விடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
பாஜக, அரசியலில் மக்கள் நலன் சார்ந்து எதார்த்தத்துடன் செயல்பட்டுவருகிறது. மக்கள் வளர்ச்சிக்காக மக்களவையில் இயற்றப்படும் மசோதாக்களை, மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. இத னால், பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படாமல் உள்ளன.
இதற்காக, மாநிலக் கட்சிகளின் ஆதரவை கோருவது என்ற முடிவை பாஜக எடுத்துள்ளது. மாநிலங் களவையில் ஓர் உறுப்பினரைக் கொண்டுள்ள கட்சி என்றாலும், அவர்களிடமும் ஆதரவு கேட்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அருண் ஜேட்லி சந்தித்து மாநிலங் களவையில் அரசுக்கு ஆதரவு கோரினார்.
இதில் எந்த உள்நோக்கமோ, அரசியல் ஆதாயமோ கிடையாது. இது முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த சந்திப்புதான். ஏற்கெனவே ரவிசங்கர் பிரசாத் சட்ட அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவை சந்தித்தார். இதனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதக மான தீர்ப்பு வருமோ என்று சிலர் சந்தேகத்தை கிளப்பினர். ஆனால், தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் வந்தது.
உள்நோக்கத்துடன் சந்திக்க வேண்டும் என்றால், வெளிப் படையாக சந்தித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த சந்திப்பை அரசியலாக்கத் தேவை யில்லை. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.