Published : 24 Jan 2015 09:49 AM
Last Updated : 24 Jan 2015 09:49 AM

போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மூலமாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், சிறப்பாசிரியர்களை இனிமேல் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான அரசாணை கடந்த 17.11.2014 அன்று வெளியானது.

அதன்படி, 95 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5 மதிப்பெண்ணுக்கு புதிய முறை கடைப்பிடிக்கப்படும். அதாவது, கூடுதல் கல்வித் தகுதிக்கு அரை மதிப்பெண், அரசு பள்ளிகளில் பணியாற்றிய அனு பவம் இருப்பின் அதற்கு 1 மதிப் பெண், தனியார் பள்ளி அனுபவம் என்றால் அரை மதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், நுண்கலை (பைன் ஆர்ட்ஸ்) சாதனை போன்ற இதர செயல்பாடுகளுக்கு ஒன்றரை மதிப்பெண், நேர்காணலுக்கு ஒன்றரை மதிப்பெண் என மொத்தம் 5 மதிப்பெண் வழங்கப்படும்.

1,000 காலியிடங்கள்

புதிய தேர்வுமுறையில் 530 உடற்கல்வி ஆசிரியர், 250 ஓவிய ஆசிரியர், 160 தையல் ஆசிரியர், 55 இசை ஆசிரியர் என ஏறத்தாழ 1000 சிறப்பாசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்தது.

இந்த நிலையில், எழுத்துத் தேர்வு நீங்கலான எஞ்சிய 5 மதிப்பெண்ணில் அரை மதிப்பெண் வழங்க வேண்டியுள்ளதால் அதனால் நடைமுறை சிக்கல் ஏற்படக்கூடும் என்றும், ஆயிரக்கணக்கானோர் சிறப்பு ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக காத்திருப்பதால் பதிவுமூப்புக்கும் (சீனியாரிட்டி) குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கலாம் என்று அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

புதிய தேர்வுமுறையிலும் மாற்றம்

இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவுசெய்துள்ளது. அரை மதிப்பெண் வழங்கும் முறையை கைவிட்டுவிட்டு, எளிதாக கணக்கிடும் வண்ணம் முழு எண்ணில் மதிப்பெண் வழங்கவும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு பதிவு செய்த வருடத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கலாமா? என்பது குறித்தும் அரசு திட்டமிட்டு வருவதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x