Published : 05 Jan 2015 08:02 PM
Last Updated : 05 Jan 2015 08:02 PM

திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மீது களங்கம்

புத்தாண்டு களேபரத்தில், சாலை விபத்தில் பலியான இளைஞர் ஒருவரால், திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்த குப்புசாமி, சித்ரா ஆகியோரது மகன் அஜித்குமார் (17). இவர், பெட்ரோல் பங்கில் பணி செய்து வந்தார், கடந்த டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டை கொண்டாட தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரது நண்பர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார் அஜித்குமார்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள மலர் பிரியா என்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று கூறினாராம். இதையடுத்து டிச. 31-ம் தேதி இரவே அங்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அஜித்குமார் ஜன.2-ம் தேதி, இறந்தார். திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தனியார் மருத்துவமனையின் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அழைத்து சென்ற தாகக் கூறி அஜித்தின் உறவினர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

அஜித்தின் உறவினர் கண்ணன் என்பவர் கூறுகையில், தனியார் மருத்துவமனையுடன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூட்டு வைத்துக்கொண்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிக்கு ஒரு லட்சத்துக்கு சிகிச்சை எடுத்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு 5 ஆயிரம் வரை தருவதால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் கண்ணை மூடிக்கொண்டு தனியார் மருத்துவமனையை நோக்கி வேகமாக பறக்கிறார்கள் என்றார்.

இது குறித்து அரசு மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். அரசு அலுவலகங்களில் வேலைகளை முடித்து தர தரகர்கள் சுற்றிவருவது போல், அரசு மருத்துவமனை வளாகத்திலும் வெளியே தெரியாமல் பலர் தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வரும் பணியை சத்தமின்றி செய்து வருகின்றனர். தற்போது அது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வரை எட்டியுள்ளது. இது திருப்பூர் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. மருத்துவச்சேவை என்பதை மாற்றி, மருத்துவத்தை தொழிலாக பார்ப்பதன் அவலம் இது என்கிறார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர்.

ஒரேயொரு நியுரோ சர்ஜன்

விபத்தில் இறந்த அஜித்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. தலைக்காயத்திற்கான நியுரோ சர்ஜன் திருப்பூரில் ஒரேயொருவர் தான் உள்ளார். அவரும் வேறொரு தனியார் மருத்துவமனையில் தான் உள்ளார். இந்நிலையில், அஜித்குமார் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் நியுரோ சர்ஜன் என்று யாரும் இல்லை. ஆனால், அப்படியொரு வசதியில்லாமல் அங்கு எப்படி அனுமதித்தார்கள் என்பதும் தற்போது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக எழுந்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறையின் மாநிலச் செயலாளர் மருத்துவர் ஜெயா கூறியது: விபத்தில் சிக்கும் பலருக்கும் தலைக்காயம் தான் பெரிய பிரச்சினையாக இருக்கும். இதனால், நிறைய உயிரிழப்புகள் ஏற்படும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களும் வாழ்ந்துவரும், தொழிலாளர் நகரத்தில் சிவகங்கை, கரூரில் அமைக்க உள்ளது போல், ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைத்தால், இது போன்ற பிரச்சினைகளை அரசு மருத்துவமனையில் களையமுடியும். மருத்துவமனை நிர்வாகம், நோயாளியை சேவை மனப்பான்மையோடு அணுகும் போது, அரசு மருத்துவமனை தரம் மென்மேலும் உயரும். அதற்கான சூழலை நாம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உருவாக்க வேண்டும் என்கிறார்

108 ஆம்புலன்ஸ் திட்ட மாவட்ட அதிகாரியிடம் பேசினோம். ஒவ்வொரு வாரமும் 108 வாயிலாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடிய, நோயாளிகள் குறித்து மாவட்ட அளவில் விசாரிப்போம். அதற்கு தனி ஒரு விசாரணை வளையம் உள்ளது. இது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.

இந்நிலையில், திருப்பூர் பாண்டியன் நகர் மலர்பிரியா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மலர்மன்னன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோர் மீது அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x