Published : 16 Jan 2015 12:41 PM
Last Updated : 16 Jan 2015 12:41 PM

வாக்காளர் பட்டியல் மோசடி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வேலை: கருணாநிதி கண்டனம்

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆளும் அதிமுகவினர் வாக்காளர் பட்டியலில் தலையிட்டு ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிடும் வகையில் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது பற்றி நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அ.தி.மு.க. வினர் ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர் பட்டியலில் தலையிட்டு ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிடும் வகையில் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தச் செய்திக்கு ஆதாரமாக சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் ஒரே வாக்குச்சாவடியில் ஒரே பெயர் 2, 3 இடங்களில் இடம் பெற்றிருப்பது, மரணம் அடைந்தவர்கள், குடியிருக்கும் இடத்தை மாறுதல் செய்து சென்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை கடந்த அக்டோபர் மாதம் சேலம் மாநகரக் கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழக அதிகாரிக்குப் புகார் மனுவாக அளிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் வரை வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட்டு வெளியிடுவதுதான் இதுவரையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. அதாவது ஆண்டுக்கு 3முறை வாக்காளர் சேர்த்தல், நீக்கல், மரணம் அடைந்தவர்கள், குடியிருக்கும் இடத்தை மாற்றம் செய்தவர்கள் போன்றவர்களைச் சரிபார்த்து, நீக்கப்பட்டு,ஒவ்வொரு முறையும், துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இறுதியாக அக்டோபர் முதல் நவம்பர் 15ம் தேதிக்குள் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள்சேர்க்கப்பட்டு, ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதத்திற்குள் அந்தந்ததொகுதியில் 2, 3 இடங்களில் வாக்காளர்கள் இடம் பெற்றது, மரணம் அடைந்தவாக்காளர்கள், குடியிருக்கும் இடத்தை மாற்றம் செய்த வாக்காளர்களையெல்லாம் நீக்கிவிட்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முழுமையான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதுதான் வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால் சேலம் மாவட்டத்தில்,ஆண்டு முழுவதும் மூன்று முறை துணை வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டு,அக்டோபர் நவம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக; 15.10.2014 முதல் 10.11.2014 வரையில் அதாவது 25 நாட்களுக்குள், தாங்கள் விரும்பியபடி 72,103 புதிய வாக்காளர்களைச் சேர்த்ததாகக்கூறி, பட்டியலை இறுதி செய்து வெளியிட்டிருக் கிறார்கள்.

தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஒரே வாக்களார் பெயர் 2, 3 இடங்களில் இருப்பது, மரணம் அடைந்தவர்கள், குடியிருக்கும் இடத்தை மாறறம் செய்தவர்கள் எனக் குறைந்தது 100 வாக்குகள் இருக்கும். அப்படிபார்த்தால் ஒரு தொகுதிக்கு 250 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதனால் 250 வாக்குச் சாவடிக்கு 100 வாக்குகள்வீதம் ஏறத்தாழ 25 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர்.

ஒரு தொகுதிக்கு 25 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருந்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைந்தது 3 லட்சம் போலிவாக்காளர்கள் இருப்பார்கள். எனவே இந்தியத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலர்களையும் கொண்டு வீடு, வீடாகச் சென்று நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டத் தேர்தல் அதிகாரியும், துணைத் தேர்தல் அதிகாரியும், மண்டலத் தேர்தல் அதிகாரிகளும் களப் பணியில் ஈடுபடாததால் ஆண்டுக்கு ஆண்டு போலி வாக்காளர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றுள்ளது. அதுவும் கடந்த 3 ஆண்டு காலமாக, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு தான் இந்த நிலை என்பதைப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

5.1.2015ம் நாள் சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண்.179ல் வரிசை எண். 697, பாக்கியம் என்பவரும் இதே பாகத்தில் வரிசை எண்.837 சிவசங்கர் என்பவர் பெயரும், அவர்கள் மரணமடைந்த போதிலும் இடம் பெற்றுள்ளனர். இதே சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண்.177.வரிசை எண்.1040ல் இடம் பெற்றுள்ள, வாக்காளர் சிராஜ் என்பவரது பெயர், வரிசைஎண்.1041. லும் இடம் பெற்றுள்ளது. இதே சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண்.180ல் வரிசை எண். 1324ல் பெயர் ரஹ்மத் பீவி என்ற பெயர் இதே வாக்காளர் வரிசை எண். 1325லும் புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளது. இப்படி சேலம்மாவட்டம் முழுவதும் 3 லட்சம் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டது.

சேலத்தைப் போலவே, பொள்ளாச்சியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் , கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் குடும்பம், குடும்பமாக நீக்கப்பட்டுள்ளன. அதுபற்றியும் கழகத்தின் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள திருவரங்கம் சட்ட மன்றத் தொகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி மாவட்ட ஆட்சியர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேகழகத்தின் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.

ஒருசில குறிப்பிட்ட இடங்களை மட்டும்இங்கே நான் குறிப்பிட்ட போதிலும், மாநில அளவில் பரவலாக இதே போன்றபுகார்கள் பல உள்ளன.

இன்னும் விரிவாகச் சொல்லவேண்டுமென்றால் 2009ஆம் ஆண்டு தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரத்து 460. இந்த எண்ணிக்கை தான் 2014இல் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 வாக்காளர்களாக உயர்ந்துள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டை விட 29.1 சதவிகிதம் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுச் சொன்னால், உத்தரப் பிரதேசத்தில் 15.8 சதவிகிதமும், பீகாரில் 13.9 சதவிகிதமும், மராட்டியத்தில் 8.2 சதவிகிதமும், ஆந்திராவில் 7.8 சதவிகிதமும், கர்நாடகாவில் 6.9 சதவிகிதமும் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே மிக அதிகமாக 29.1 சதவிகிதமாக வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது, எந்த அளவுக்கு போலி வாக்காளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக்கப்பட்டுள்ளது என்பதைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும்.

கழகத் தோழர்களும், முன்னணியினரும் உள்கட்சித் தேர்தல் பணிகளிலே ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த போது, ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் உதவியோடு, ஜெயலலிதாவின் தூண்டுதலோடு இவ்வாறு போலி வாக்காளர்களைச் சேர்ப்பது, உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது போன்ற பொய் புனைசுருட்டுப் பணிகளிலே ஒவ்வொரு தொகுதியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைத் தான் இந்த விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த நடவடிக்கைகளைச் சட்ட ரீதியாகச் சந்திக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமக்குள்ளதுஎன்பதால், புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ள மாவட்டக் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், இறுதி வாக்காளர் பட்டியலை நுறு சதவிகிதம் நேரடியாகச் சரிபார்த்து, முறைகேடுகளையும், மோசடிகளையும் நீக்குவதற்கான சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடனடியாக முன் வர வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் நமக்கா வாய்ப்பு கிடைக்கப் போகிறது, வாய்ப்பு கிடைக்கக்கூடியவர்கள் இந்தப் பணியிலே ஈடுபடட்டும் என்று நினைக்காமல், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய இந்தப் பணியிலே தங்களுடைய பங்களிப்பினைச் செலுத்திட முன் வர வேண்டும்.

நான் ஏற்கனவே கூறியபடி, வெற்றி மீது மட்டும் கவனம் இருந்தால் போதாது, அந்த வெற்றிக்கு அடித்தளமான வாக்காளர் பட்டியல் தயாரிப்பிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டக் கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமைக் கழகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு; முக்கியமான இந்தப் புகார் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையமும், மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியும் முறையாக விசாரித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் '' என்று கருணாநிதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x