தீவுத்திடல் பொருட்காட்சியில் கடைகள், அரசு அரங்குகள் திறப்பதில் தாமதம்: பார்வையிட வரும் பொதுமக்கள் ஏமாற்றம்

தீவுத்திடல் பொருட்காட்சியில் கடைகள், அரசு அரங்குகள் திறப்பதில் தாமதம்: பார்வையிட வரும் பொதுமக்கள் ஏமாற்றம்
Updated on
1 min read

தீவுத்திடலில் தொடங்கப்பட்டுள்ள சுற்றுலாத் தொழில் பொருட் காட்சியில், இன்னும் கடைகள் திறக்கப்படாமலும், பொழுது போக்கு அம்சங்கள் செயல்படாமலும் இருப்பதால், அங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைகின்றனர்.

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் ஜனவரி மாதம் தொடங்கி 70 நாட்களுக்கு சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு சுற்றுலாப் பொருட்காட்சி கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. அமைச்சர் வளர்மதி பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சண்முகநாதன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோரும் பங்கேற்றனர். வரும் 9-ம் தேதி வரை பொருட்காட்சிக்கு வருவோருக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொருட்காட்சி தொடங்கப்பட்டதை அறிந்த பொதுமக்கள் கடந்த 3-ம் தேதி முதல் நேற்றுவரை தீவுத்திடலுக்கு கூட்டம், கூட்டமாக வந்தனர். ஆனால், அங்கு கடைகள் எதுவும் திறக்கப்படாமலும், அரசு அரங்குகளில் கூட பணிகள் முடியாமலும் இருந்தன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொருட்காட்சிக்கு வந்த பெரம்பூரைச் சேர்ந்த மணியம்மாள், ரங்கநாயகி உள்ளிட்ட பெண்கள் கூறியதாவது: அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடியும் நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொருட்காட்சியைக் காட்டலாம் என்று வந்தோம். ஆனால் இங்கு கடைகள் திறக்கப்படவில்லை. பொருட் காட்சிக்கு வழக்கமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த முறை இன்னும் பேருந்துகளும் இயக்கப்படாததால், மெரினாக் கடற்கரைக்கு பேருந்தில் வந்து, அங்கிருந்து நீண்ட தூரம் நடந்து வந்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

முழுமையாக தயாரான பிறகு, பொருட்காட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தால் எங்களைப் போன்றோருக்கு தேவையற்ற அவதி ஏற்படாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடைகள் திறக்கப்படாமல் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அரங்குகளை அமைக்க வேண்டிய தனியார் கடைகள், வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதிக்குள் பெரும்பாலான கடைகள் முழு அளவில் இயங்கத் தொடங்கிவிடும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in