Published : 19 Jan 2015 09:38 am

Updated : 19 Jan 2015 10:48 am

 

Published : 19 Jan 2015 09:38 AM
Last Updated : 19 Jan 2015 10:48 AM

‘தி இந்து’ இலக்கிய விழா நிறைவு: தேசிய இலக்கிய வரைபடத்தில் சென்னைக்கு சிறப்பிடம்

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ‘தி இந்து’ இலக்கியவிழா நேற்று நிறை வடைந்தது. இந்த இலக்கிய விழாவின் சிறப்பான வெற்றி, இந்திய இலக்கிய வரைபடத்தில் சென்னைக்கு சிறப்பிடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

2010-ம் ஆண்டு நவம்பரில் முதல் முதலாக ஒரு இலக்கிய நிகழ்வுக்கு ‘தி இந்து’ ஏற்பாடு செய்தது. இலக்கிய விமர்சனப் பகுதியின் 20 ஆண்டு நிறைவினையொட்டி, அந்த விழாவுக்கு குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான நிர்மலா லக்ஷ்மன் ஏற்பாடு செய்தார். அதில், முன்னாள் பிரதமர் நேருவின் பேத்தியான நயன்தாரா சகல், நேருவை பற்றிய தனது நூலினை வெளியிட்ட நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்தது.

அடுத்ததாக 2011-ல், டெல்லியில் ஒரு நாளும், சென்னையில் மூன்று நாட்களும் ‘தி இந்து’ இலக்கிய விழா நடைபெற்றது. 2014-ல் நான்காவது ஆண்டில் அடியெடுத்துவைத்தது. 2010-ல் வெறும் 500 பேர் அழைக்கப்பட்டதுபோய், 2014-ல் அழைப்பு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 5 ஆயிரமாக உயர்ந்தது.

கருத்துரிமைக்கு…..

இந்தநிலையில், ஐந்தாவது ஆண்டாக, சென்னையில் ‘தி இந்து’ இலக்கிய விழா சேத்துப் பட்டில் உள்ள முத்தா வெங்கட சுப்பாராவ் அரங்கில், கடந்த 16-ம் தேதி தொடங்கி, நேற்றுவரை நடந்தது. இதில், ‘புக்கர்’ பரிசு வென்ற எலினார் கேட்டன் மற்றும் நயன்தாரா சகல், சேத்தன் பகத், ஜோனதன் கில் ஹேரிஸ், டேமன் கால்கட், ஜங் சாங், அதாப் சோயிஃப், அமிதாபா பாக்சி, ஆ.இரா. வேங்கடாசலபதி, டேவிட் தேவிதார் போன்ற எழுத்தாளர்கள், தங்களது நூல்களைப் பற்றி மட்டுமின்றி பல்வேறு தலைப்புகளில் நடந்த குழு விவாதங்களிலும் பங்கேற்றனர்.

விவாதங்களில், நூல்கள் மற்றும் இலக்கியம் மட்டுமின்றி கருத்துரிமை, சமையல்கலை, நடனம், புகைப்படக்கலை என பல்வேறு சிறப்புத் தலைப்புகளில் சுமார் 50 விவாதங்கள் நடைபெற்றன.

நடனக் கலைஞர்கள் அனிதா ரத்னம், அலர்மேல்வள்ளி, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நகரமைப்பு வல்லுனர் ஸ்ரீவத்சன், பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், பி.சாய்நாத், ஞானி, சுசீலா ரவீந்திரநாத், மற்றும் திரையுலகைச் சேர்ந்த ரோஹினி, வெற்றிமாறன், டிஸ்கா சோப்ரா, நிம்ரத் கவுர் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் பங்கேற்ற குழு விவாதங்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்தன.

சமீபத்தில் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களைக் கண்டித்து, முன்னெப்போதும் இல்லாதவகையில், ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கருத்துரிமையைப் பறிக்க முயல்வோரின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்களும் ஒருமனதாக ஆதரவளித்தனர்.

“இந்த இலக்கிய விழாவைக் காண கடந்த ஆண்டைப் பதிவு செய்தவர்களைக் காட்டிலும் இந்த ஆண்டு 100 சதவீதம் பேர் அதிகமாக பதிவுசெய்துள்ளனர்,” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான நிர்மலா லஷ்மன் கூறினார்.

சென்னையில் நடைபெறும் இந்த இலக்கிய விழா, நூலினைவாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள் மட்டுமன்றி, இதர தரப்பினரையும் கவர்ந்திழுத்தது குறிப்பிடத்தக்கது. இதில், பங்கேற்ற பார்வையாளர்கள், ஒவ்வொரு குழு விவாதத்தின் முடிவில் தங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பினர். அவற்றுக்கு நிபுணர்கள் பதிலளித்தனர். ‘தி இந்து’ இலக்கிய விருதினை எழுத்தாளர் அசோக் சீனிவாசன் வென்றார்.

நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று, சென்னை மாநகராட்சி மாணவ-மாணவியருக்கு புதிய சாப்ட்வேர் மூலம் அளிக்கப்பட்டு வரும் ஆங்கிலத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நேரடியாக நடத்திக் காட்டியது அனைவரின் கவனத்தை யும் கவருவதாக அமைந்தது.

நாட்டில் தற்போது ஓராண்டில் 60-க்கும் மேற்பட்ட இலக்கிய விழாக்கள் நடைபெறத் தொடங்கி யுள்ள நிலையில், சிறப்பான நிகழ்வுகளைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து மெருகேறி, தனிச்சிறப்புடன் நடைபெற்று வரும் ‘தி இந்து’ இலக்கிய விழா, தேசிய இலக்கிய வரைபடத்தில் சென்னை நகருக்கு சிறப்பானதொரு இடத்தினைப் பெற்றுத்தந்துள்ளது என்றால் மிகையாகாது.

‘தி இந்து’ இலக்கிய விழா நிறைவுதேசிய இலக்கிய வரைபடம்சென்னைக்கு சிறப்பிடம்

You May Like

More From This Category

More From this Author