Published : 27 Jan 2015 09:49 AM
Last Updated : 27 Jan 2015 09:49 AM

பண்டிகை நாட்களில் ‘போர்டை’ மாற்றி கூடுதலாக வசூலிக்கும் நூதனம்: மாநகர போக்குவரத்துக் கழகம் மீது புகார்

பண்டிகை நாட்களில் சாதாரண கட்டண பஸ்களில் போர்டை மட்டும் மாற்றி கூடுதலாக வசூலிக்கும் நூதனத்தில் அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருவதாகவும், இதன்மூலம் சாதாரண கட்டண பஸ்கள் குறைந்து மக்கள் அவதிப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலுக்கு வரப்பெற்ற தகவல் விவரம்:

விடுமுறை மற்றும் பண்டிகை நாட் களில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அந்த நேரங்களில் வழக்கமாக இயக்கப்படும் சாதாரண கட்டண பஸ்களில், போர்டை மட்டும் மாற்றி சொகுசு அல்லது விரைவு பஸ்கள் என்ற அடையாளத்துடன் இயக்கி கூடுதலாக வசூலித்து விடுகின்றனர். இதன்மூலம், இயல்பாகவே சாதாரண பஸ்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது.

குறிப்பாக, கடந்த காணும் பொங்கலன்று கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வதற்காக, பெரம்பூரில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது, வழக்கமாக சாதாரண கட்டணத்தில் இயக்கப்படும் 29சி, 42 ஆகிய பஸ்களில், போர்டுகளை மட்டும் மாற்றி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வெறும் போர்டுகளை மட்டும் மாற்றிவிட்டு, கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்?

மக்களும், வேறுவழியின்றி அந்த பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, பண்டிகை நாட்களில் சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றார்.

இதுதொடர்பாக போக்கு வரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்டபோது, ‘பண்டிகை நாட்களில் சாதாரண பஸ்களை குறைத்து இயக்க வேண்டும் என்று நிர்வாகத் தரப்பிலிருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சாதாரண பஸ்களை குறைத்து, அதற்குப் பதிலாக சொகுசு மற்றும் விரைவு பஸ்களை இயக்குவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x