Published : 29 Jan 2015 05:23 PM
Last Updated : 29 Jan 2015 05:23 PM

இந்திய அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல்: பாஜக அரசுக்கு எதிராக வைகோ கடும் விமர்சனம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தும் பாஜக அரசின் பாசிசப் போக்கால் இந்திய ஒருமைப்பாடு தகர்ந்துபோகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஊறு விளைவித்து மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அவற்றையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் மௌனம் கடைபிடித்து வருகிறார் என்பதால் அவருடைய ஒப்புதலின்பேரில்தான் ‘இந்துத்துவா’ சக்திகள் கொட்டம் அடித்து வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ள கருத்துகளும் பிரதமரின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்று மக்கள் கருதுகிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றுள்ள ‘மதசார்பற்ற’ ‘சோசலிச’ ஆகிய இரு வார்த்தைகளையும் நீக்குவது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று விஷமத்தனமான கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மதச்சார்பற்ற இந்தியா

குடியரசு தின விழாவையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரையில் இடம் பெற்றிருக்கும் ‘மதசார்பற்ற’ ‘சோசலிச’ ஆகிய இரு வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “இந்தியா மதச்சார்பற்ற தேசம் என்பதை நிரூபிக்க அரசியல் சாசனத்தின் முகவுரையில் மதச் சார்பின்மை என்ற வார்த்தை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எதிர்காலத்தில் இந்த இரு வார்த்தைகளும் இல்லாத அரசியலமைப்புச் சட்டத்தின் பழைய முகவுரையையே மத்திய அரசு பயன்படுத்தும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் இத்தகைய போக்கு இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூறி வரும் ஆர்எஸ்எஸ் கருத்துக்கு வலு சேர்ப்பதுடன் எதிர்காலத்தில் விரும்பத்தகாத விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு என்பதுதான் இந்தியாவுக்கு உலக அரங்கில் கீர்த்தியைப் ஏற்படுத்தி புகழ் சேர்த்து வந்துள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், பின்பற்றப்படும் மத உரிமைகள் இவைதான் இந்தியாவின் அரசியல் சாசனத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

அரசியல் சட்டத்தின் முகப்புரையில் 1976-ஆம் ஆண்டு 42-ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட ‘மதச்சார்பற்ற’ ‘சோசலிச’ ஆகிய வார்த்தைகளை நீக்குவதன் மூலம் மோடி அரசு இந்து - இந்தி - இந்து ராஷ்டிரா என்பதைச் சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறது. மதச்சார்பின்மைத் தத்துவத்தின் மீது மட்டுமல்ல; இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தவும் துணிந்துவிட்ட பாஜக அரசின் பாசிச வெறிப்போக்கு உடனடியாக நிறுத்தப்படாவிடில் இந்திய ஒருமைப்பாடு தகர்ந்துபோகும் என எச்சரிக்கிறேன்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x