Published : 05 Apr 2014 09:45 AM
Last Updated : 05 Apr 2014 09:45 AM

ஜெயலலிதாவின் பிரதமர் கனவு ஒருபோதும் நனவாகாது: மனிதநேய மக்கள் கட்சி மூத்தத் தலைவர் ஜவாஹிருல்லா சிறப்புப் பேட்டி

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கைகோத்து களமிறங்கிய மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் திமுக துணையுடன் தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் களம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி.

நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்பது உண்மையிலேயே சாத்தியம்தானா?

சமூக நீதி சார்ந்த கட்சிகளை ஒருங்கிணைத்து திமுக ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. எங்கள் கூட்டணி எவ்வித முரண் பாடுகளும் இல்லாத ஒருமித்த கருத்துடைய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி.

அதிமுக தனித்து விடப்பட்டிருக் கிறது. பாஜக கூட்டணி முரண் பாடுகளின் மொத்த உருவம். ‘சேம் சைடு கோல்’ போடும் தலைவர்கள் எல்லாம் கூடி அந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

சமூக நீதியில் அக்கறையுள்ள கட்சி பாமக. சமூக நீதிக்கு எதிரான கட்சி பாஜக. ஈழப் பிரச்சினையில் பாஜக-வுக்கும் மதிமுக-வுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

இன்னொரு பக்கம், தேமுதிக-வும் பாமக-வும் பழைய பகையை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு பற்றுதல் இல்லாமல் நிற்கும் கட்சிகள். தேர்தலில் போட்டியிட கூட்டணி பலம் அவசியம்தான். ஆனால், அது மனோதத்துவ ரீதியாக அமைய வேண்டும். அத்தகைய கூட்டணி திமுக-வுக்கு மட் டுமே அமைந்திருப்பதால் நாற்பதிலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என அதிமுக-வினர் ஆர்ப்பரிக்கிறார்களே?

பிரதமராக வருவதற்கு வாக்குரிமை உள்ள யார் வேண்டுமானாலும் கனவு காண லாம். ஆனால் அது நனவா குமா என்பதுதான் முக்கியம்.

பிரதமர் வேட்பாளர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்பவர், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண் டும். ஆனால், கடைசி நேரத்தில் கம்யூனிஸ்டுகளை கழற்றிவிட்ட ஜெயலலிதாவுக்கு மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் மனப் பக்குவம் இல்லை. அதனால், அவரது பிரதமர் கனவு ஒருபோதும் நனவாகாது.

ஒருவேளை, தேர்தல் முடிவு களுக்குப் பிறகு பாஜக-வை ஆதரிக்கும் நிலைப்பாட்டை திமுக எடுத்தால் என்ன செய்வீர்கள்?

’மத நல்லிணக்கத்தைப் போற்று வோம்; மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம்’ என்று திமுக தனது தேர்தல் அறிக்கை யிலேயே தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டது. எனவே, பாஜக ஆட்சியமைக்க திமுக ஆதரவு கொடுக்கும் என்பதை ஏற்பதற் கில்லை.

மனிதநேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்பட்டிருக்கிறதே?

எங்கள் கட்சி கட்டுக்கோப்பாய் இருக்கிறது. கட்டப் பஞ்சாயத்து செய்தவர்களையும் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல் பட்டவர்களையும் பல மாதங்க ளுக்கு முன்பே கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்.

முஸ்லிம்கள் 9 சதவீதம் இருக் கும் குஜராத்திலும் 17 சதவீதமாக இருக்கும் உத்தரப்பிரதேசத்திலும் பாஜக முஸ்லிம்கள் ஒருவரைகூட வேட்பாளராக நிறுத்தாதது குறித்து..?

சட்டமன்றத் தேர்தலிலேயே முஸ்லிம்கள் ஒருவர்கூட போட்டி யிட வாய்ப்பளிக்கவில்லை மோடி. அப்படிப்பட்டவர்களிடம், நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் முஸ்லிம்களுக்கு வாய்ப் பளிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்தத் தேர்தலில் பாஜக-வுக்குள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாகச் சொல்கிறார்களே?

நிச்சயமாக.. மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த திலிருந்து முக்கியத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட் பாளர்கள் யார் என்பதுவரை ஆர்.எஸ்.எஸ்.தான் தீர்மானித் திருக்கிறது. இந்தத் தேர்தலில் பல்வேறு விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ். என்ற கோட்டைத் தாண்டி பாஜக-வால் எதையுமே செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஒருவேளை, பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமரானால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியா மதச்சார்பற்ற நாடு. சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்லும் அற்புதமான தேசம். அமைதியான இந்தியாவின் அடித் தளமே இதில்தான் அடங்கி இருக்கிறது.

பாஜக ஆட்சிக்குவந்தால் இந்தியாவின் அடித்தளத்துக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படும். அந்தப் பாதிப்புகளில்இருந்து இந்த தேசத்தை மீட்டெடுக்க நீண்ட காலம் ஆகும். அது நடந்துவிடக்கூடாது என்றுதான் எங்களைப் போன்றவர்கள் அஞ்சுகிறோம்.

பிரதமர் வேட்பாளர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்பவர், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் கம்யூனிஸ்டுகளை கழற்றிவிட்ட ஜெயலலிதாவுக்கு மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x