Published : 06 Jan 2015 08:41 AM
Last Updated : 06 Jan 2015 08:41 AM

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜன. 9 முதல் சென்னை புத்தகக் காட்சி: மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்

சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகத்தார் கூட்டமைப்பின் தலைவர் மீனாட்சி மோகனசுந்தரம், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

எங்களது கூட்டமைப்பின் சார்பில் 38-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி மாலை தொடங்குகிறது. காட்சியை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார். ஜனவரி 21 வரை 13 நாட்களுக்கு காட்சி நடக்கிறது. வார நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையும் காட்சியை பார்வையிடலாம்.

தொடக்க விழாவில் பதிப்பகச் செம்மல், சிறந்த புத்தக விற்பனையாளர், சிறந்த குழந்தை எழுத்தாளர், சிறந்த ஆங்கில எழுத்தாளர் உள்ளிட்ட விருது கள் வழங்கப்படுகின்றன. இவ்விருது களை காவல்துறை அதிகாரி வன்னிய பெருமாள் வழங்குகிறார். மேலும் மாணவர் களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மீனாட்சி மோகனசுந்தரம் கூறினார்.

கூட்டமைப்பின் செயலாளர் கே.எஸ்.புகழேந்தி கூறியது:

கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் 5 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றன. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. வாசகர்கள் புதிய புத்தகங்களை அறிந்துகொள்ள இணையதள வசதிகளும் உள்ளன. வாசகர்களின் வசதிக்காக காட்சி திடலில் 5 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கூடுதல் பார்க்கிங் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகக் காட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி, அண்ணாநகர் டவர் பூங்காவில் நாளை (இன்று) நடக்கிறது. இதில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று புத்தகங்களை வாசிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் சி.சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார்.

இதுவரை நடந்த புத்தகக் காட்சி களுக்கு அரசு தரப்பில் நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது.

புத்தகக் காட்சியை நடத்த நிரந்தரமாக ஒரு இடத்தை அரசு ஒதுக்கித் தரவேண்டும். இட பற்றாக்குறையால் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டால் அமைக்க இடமின்றி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x