

தமிழ்ப்புத்தாண்டு திருநாளான தை முதல் நாளை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அதை ரத்து செய்தது. இவரது அந்த அறிவிப்பை பாஜக அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக , கி.வீரமணி உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அ.தி.மு.க. அரசு ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ என்பதைப் பற்றி கவலைப்படாமல், தைத் திங்கள் முதல் நாளை, தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக சீரும் சிறப்புமாகக் கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும்.