

சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மேயர் சைதை துரைசாமி பேசினார்.
சென்னை மாநகராட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
தனித்து நின்று தமிழகத்தின் 39 தொகுதிகளில் 37-ல் வெற்றி பெற்று தமிழக மக்கள் அனைவரும் தன் பக்கம் இருப்பதை நிரூபித்துக் காட்டினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மக்களவையில் 37 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்கள் என மொத்தம் 48 உறுப்பினர்களுடன் நாட்டின் 3-வது மிகப் பெரிய கட்சியாக அதிமுக உருவாகியுள்ளது. அவர் முதல்வராக இருந்து தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்பதுதான் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு. அந்த தீர்ப்பை தந்த மக்களுக்காக அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமென்ட், அம்மா குடிநீர் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் அவர்.
முதல்நிலை நோக்கி தமிழகத்தை முன்னெடுத்துச் சென்றதால் இனி என்றென்றும் ஜெயலலிதாதான் தமிழகத்தை ஆளவேண்டும் என்று ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் வெற்றியைத் தந்துள்ளனர்.
அவரது பிறந்த நாளின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல அவரது பிறந்தநாளை சென்னை மாநகர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தினமாக சென்னை மாநகராட்சி சார்பில் கடைபிடித்து வருகிறோம்.
சென்னை மாநகராட்சி சிறப்பு பெற்றிட, இதுவரை இல்லாத வகையில் பெரு நிதி ஒதுக்கி வழி அமைத்துத் தந்த ஜெயலலிதாவுக்கு இந்த மாமன்றம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு மேயர் பேசினார்.