

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் மூலிகை சூப் விற்பனை செய்து வருகிறார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவ னங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சித்ரா (வயது 21). விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் இவர், வேலைநேரம் போக மீதமுள்ள நேரத்தில் சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் மூலிகை சூப் மற்றும் பழரசங்களை விற்பனை செய்து வருகிறார்.
இதுபற்றி சித்ரா கூறியதாவது:
என் அப்பா ராஜ்கமல், தனியார் கடை ஒன்றில் வேலை பார்த்துவந்தார். சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அம்மா ரேவதி, தனியார் பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். அவர்களுக்கு நான் ஒரே மகள். சென்னை அருகே உள்ள தனியார் கடல்சார் பல்கலைக்கழகத்தில் பிபிஎம் படித்துவிட்டு விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வரு கிறேன். இரவு ஷிப்டில் பணியாற் றும் நான் மாலை 5 மணிக்கு வேலைக்கு சென்று அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்புவேன். இடைப்பட்ட நேரத்தில் உருப்படி யாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.
அப்போதுதான் அண்ணாநகர் டவர் பூங்காவில் கிரீன் டீ விற்கும் யோசனை வந்தது. வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்துடன் மாநகராட்சி அதிகாரி, வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று, கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாநகர் டவர் பூங்காவில் க்ரீன் டீ விற்கத் தொடங்கினேன். க்ரீன் டீயுடன் தேன், எலுமிச்சை சாறு, புதினா இலை கலந்து விற்றேன். சில நாட்களில் விற்பனை சூடுபிடித்தது. இதைத் தொடர்ந்து வாழைத்தண்டு, பாகற்காய், புதினா ஜூஸ் ஆகியவற்றையும், மூலிகை சூப்பையும் விற்கத் தொடங்கினேன்.
நெல்லி, கேழ்வரகு, கீரை, காய்கறிகளின் மருத்துவ குணங்களை இணையத்தில் படித்து தெரிந்துகொண்டு என் வாடிக்கையாளர்களுக்கு விளக்குகிறேன். கிரீன் டீ உடல் எடையை மட்டும்தான் குறைக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது புற்றுநோய் வருவதை தடுப்பதுடன் சரும பாதுகாப்பு, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பது பலருக்கு தெரியவில்லை.
இந்த சுயதொழிலால் வருமானத்துடன் எனக்கு மனநிறைவும் கிடைக்கிறது. இந்த வருமானத்தைக் கொண்டு கல்விக் கடனையும் அடைத்து வருகிறேன். அம்மாவிடமும் இனி வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். டவர் பூங்கா போல வேறு சில பூங்காக்களிலும் சூப் விற்பது குறித்து யோசித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.