கர் வாப்ஸி: சென்னை மடத்தில் 10 பேர் மறு மதமாற்றம்

கர் வாப்ஸி: சென்னை மடத்தில் 10 பேர் மறு மதமாற்றம்
Updated on
1 min read

சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'கர் வாப்ஸி' நிகழ்ச்சியில் 10 பேர் மறு மதமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மீஞ்சூரைச் சேர்ந்தவர்கள்.

சென்னை தியாகராய நகர் மாம்பலம் பகுதியில் அமைந்துள்ளது சங்கர மடம். இங்குதான் 'கர் வாப்ஸி' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.

முன்னதாக, இந்நிகழ்ச்சி குறித்து இந்து மக்கள் கட்சியினர் கூறுகையில், "இந்துக்கள் அல்லாதவர்கள் 108 பேரை இந்து மதத்துக்கு மறு மதமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சங்கர மடத்தில் இன்று காலை முதல் இந்து மக்கள் கட்சிப் பிரதிநிதிகள் குவிந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

காலை 10.30 மணியளவில் மறு மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சிலர் வந்தனர். சங்கர மடத்திற்கு வந்தவர்களை வரவேற்றதோடு, "இந்து மதத்தில் தீண்டாமை இல்லை, மறு மதமாற்றம் செய்வதால் உங்கள் பாவங்கள் இன்று முதல் கழுவப்பட்டது" என இந்து மக்கள் கட்சிப் பிரதிநிகள் கூறினர்.

10 பேருக்கு மறு மதமாற்ற சம்பிரதாயம் செய்யப்பட்டது. அவர்கள் காமாட்சியம்மனை வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் இந்து மதத்துக்கு மாறிய தெய்வநாயகி, "நான் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியதால் என்னை என் குடும்பத்தினர் அனைவரும் ஒதுக்கி வைத்திருந்தனர்" என்றார்.

இதற்கிடையில், மறுமதமாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற சுமார் 150 பேர் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் கூறும்போது, "இந்து மதத்துக்கு மீண்டும் மாற வருபவர்களை மட்டும் போலீஸார் தடுக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு காவல்துறை எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in