Published : 07 Jan 2015 09:45 AM
Last Updated : 07 Jan 2015 09:45 AM

தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு காலக்கெடு விதித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய நதிநீர் இணைப்பு கமிட்டிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நதிகள் இணைப்பு திட்ட சிறப்பு கமிட்டியின் 2-வது தேசிய அளவி லான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் என்.எஸ்.பழனியப்பன் பங்கேற்று, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உரையை வாசித்தார். அதன் விவரம்:

தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள மாநிலமாக உள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் குடிநீருக்கு பருவ மழையையும் அண்டை மாநில நீர்வரத்தையும் சார்ந்தே உள்ளது. எனவே, நாட்டில் மேற்கு நோக்கி பாயும் நதிகளை கிழக்கு நோக்கி திருப்பி இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

கடந்த 1993-ம் ஆண்டிலேயே இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பிரதம ருக்கு வேண்டுகோள் விடுத்துள் ளார். ‘தேவைக்கு அதிகமான தண்ணீர் ஓடும் மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளை தண்ணீர் பற்றாக்குறை கொண்ட கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி மற்றும் வைகை நதிகளுடன் இணைக்க வேண்டும். மேற்கு நோக்கி ஓடும் பம்பை, அச்சன்கோவில் நதிகளை கிழக்கு நோக்கி திருப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி பிரதமரைச் சந்தித்து அளித்த மனுவிலும் நதிகளை தேசிய அளவில் இணைக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

தற்போது நதிகளை இணைக் கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணிகளைப் போல், தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தையும் மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும்.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு சாத்தியக்கூறு அறிக்கை, தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையும் தயாராகிவிட்ட தால், தாமதமின்றி இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண் டும்.

காவிரி (கட்டளை), வைகை மற்றும் குண்டாறு இணைப்புக்கான நில எடுப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். பம்பை, அச்சன்கோவில் மற்றும் வைப்பாறு நதிகளை இணைக்க கேரளம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இத்திட்டம் இரு மாநிலத்துக்கும் பயனளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஓடும் பெண்ணை ஆறு (சாத்தனூர் அணை) - பாலாறு இணைப்பு, பெண்ணை ஆறு (நெடுங்கல் அணைக்கட்டு) - பாலாறு இணைப்பு, காவிரி (மேட்டூர் அணை) - சரபங்கா நதி இணைப்பு, அத்திக்கடவு - அவிநாசி வெள்ள கால்வாய் திட்டம், தாமிரபரணி கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு ஆகிய திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். நாட்டின் நலன் கருதி, குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ண யித்து, தாமதமின்றி நதிகள் இணைப்புத் திட்டங்கள் நிறைவேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பன்னீர் செல்வம் தனது உரையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x