Published : 22 Jan 2015 10:12 AM
Last Updated : 22 Jan 2015 10:12 AM

சென்னை புத்தகக் காட்சி நிறைவு விழா: மனிதனை மாமனிதனாக மாற்றுவது புத்தக வாசிப்பே - சென்னை பல்கலை. துணைவேந்தர் தாண்டவன் கருத்து

மனிதனை மாமனிதனாக மாற்றுவது புத்தக வாசிப்பே என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 9ம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேசியதாவது:

இன்றைக்கு சென்னையின் ஓர் அங்கமாக சென்னை புத்தகக் காட்சி விளங்கி வருகிறது. இதன் மூலம் வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் மிகுந்த பயனடைகிறார்கள்.

புத்தகங்கள் வாசித்தலின் உண்மையான நோக்கம், மொழியறிவைக் கற்றல், தொடர்பு கொள்ளுதல், தகவல்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவையாகும்.

சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தை, எனது பெற்றோர்கள் எனக்கு ஏற்படுத்தித் தந்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் இன்றும் புத்தக வாசிப்பில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு மனிதனுக் கும் படிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். பாடப் புத்தகத்தை படிப்பதால் மட்டுமே தலைமைப் பண்போ, அறிவாற்றலோ வளர்ந்துவிடாது. தொழில் சார்ந்த, சமூகம் சார்ந்த, அறிவியல் விழிப்புணர்வு மிக்க புத்தகங்களை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். அதன் மூலமே மனிதன் மாமனிதனாக மாற முடியும்.

தோண்டத் தோண்ட சுரக்கிற நீர்ச்சுனை போன்றது கல்வி என்று கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார் திருவள்ளுவர். அப்படி அறிவு சிறக்கிற கல்வியை வளரும் தலைமுறை பெற வேண்டுமானால், புத்தக வாசிப்பை அவர்கள் கைக்கொள்ள வேண்டும். அதோடு கல்லூரிகளிலும், புத்தக வங்கிகளைத் தொடங்கி மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்தாண்டு புத்தகக் காட்சியின்போது சென்னை பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்து உறுப்பு கல்லூரிகளி லும் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவரும் பங்கேற்கும் விதமாக சுற்றறிக்கை அனுப்பி 2 லட்சம் மாணவர்களும் 10 ஆயிரம் ஆசிரியர்களும் புத்தகக் காட்சியில் பங்கேற்கும் வகையில் என்னாலான பணிக ளைச் செய்வேன். இவ்வாறு ஆர்.தாண்டவன் பேசினார்.

நிறைவு விழாவில், பபாசி தலைவர் மீனாட்சி சோமசுந்தரம், செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன், சைதாப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் தம்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x