காணும் பொங்கல்: மெரினாவில் சிறப்பு ஏற்பாடு
காணும் பொங்கலான இன்று சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையின் 4-வது நாள் கொண்டாட்டமான காணும் பொங்கல், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவது வழக்கம். பலர் மாட்டு வண்டிகளிலும் வருவார்கள். கடற்கரை மணல், மர நிழல், புல்தரைகளில் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவது, விளையாடுவது என அமர்க்களப்படுத்துவார்கள்.
காலை 8 மணி முதலே மெரினாவில் மக்கள் கூட்டம் வரத் தொடங்கிவிடும். கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதால், கடற்கரை முழுவதும் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதை தாண்டி யாரும் கடலுக்குள் செல்லக்கூடாது. இன்று கடலில் குளிக்க அனுமதி கிடையாது. மெரினாவில் 4 இடங்களில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் வசதிக்காக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மக்கள் கூட்டத்தைப் பொருத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். மக்கள் கூட்டம் அதிகமாகும் நேரத்தில் போர் நினைவுச் சின்னம் முதல் கண்ணகி சிலை வரை போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்படும். பெல்ஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மெரினா, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். சென்னை மெரினா கடலில் குளிக்கும் பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
