Published : 18 Jan 2015 15:46 pm

Updated : 18 Jan 2015 15:46 pm

 

Published : 18 Jan 2015 03:46 PM
Last Updated : 18 Jan 2015 03:46 PM

நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு

தெருவில் நடந்து சென்ற 25 வயதுப் பெண்ணை ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள். அந்தக் கொடூர நிகழ்வைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் நிலைகுலைந்து போனார். குற்றவாளிகளைச் சும்மா விடக்கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவது போலவே அந்தத் தாய்க்கும் ஏற்பட்டது. முதலில் மகளை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். பிறகு ராணுவ வீரர்களிடம் சென்றார்.

“நேற்று உங்கள் வன்முறைக்கு ஆளான பெண்ணின் அம்மா நான். மிக உயர்வாக நினைத்த உங்களிடம் இருந்து இதுபோன்ற செயல்களை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

தவறு செய்த ராணுவ வீரர்கள் தலை கவிழ்ந்தனர். அவரிடம் தங்கள் செயலை மன்னிக்கும்படி கேட்டனர். யாரும் எளிதாகச் செய்துவிட முடியாத இப்படி ஒரு காரியத்தைச் செய்தவர் நீமா நமடாமு. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜனநாயகக் குடியரசு காங்கோவில் வசிக்கிறார்.

1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்ற போர்களில் இதுவரை 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 4 லட்சம் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குப் பலியாகிறார்கள். இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவும் ஒரு நாட்டில் அமைதிக்காகவும் பெண்களின் உரிமைகளுக்காகவும் நீமா தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்.

போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பழங்குடி இனத்தில் பிறந்தார் நீமா. ஆண் குழந்தைகள் பிறந்தால் விழாபோல் கொண்டாடுவார்கள். பெண் குழந்தை என்றால் எந்தவித ஆரவாரமும் இருக்காது. இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார் நீமா. ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால் அவருடைய தந்தை வேறு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அம்மாவுக்கு நீமா மேல் அளவுக்கு அதிகமான அன்பு. பிறர் உதவி தேவைப்படும் தன் மகள், பிறருக்கு உதவுவதுபோல் ஒரு நிலையை எட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். பள்ளியில் சேர்த்து, மூன்று ஆண்டுகள் வரை முதுகில் தூக்கிச் சென்று படிக்க வைத்தார். பிறகு நகருக்குச் சென்று படிப்பைத் தொடர்ந்த நீமா, தன் நாட்டில் நிலவும் சூழ்நிலைகளையும் பெண்களின் நிலைமைகளையும் புரிந்துகொண்டார்.

பொதுப் பணியில் ஆர்வம்

பள்ளியில் படிக்கும்போதே வாரத்துக்கு ஒருமுறை வானொலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் நடத்தத் தொடங்கினார். உயர் கல்வியை காங்கோ தேசியப் பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போது புருண்டி, ருவாண்டா போன்ற நாடுகளிலும் காங்கோவில் நடைபெற்ற மாநாடுகளிலும் பங்குபெற்றார் நீமா. பட்டம் பெற்ற இரண்டாவது பழங்குடிப் பெண் என்ற சிறப்புடன் வெளிவந்த நீமா, பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்காண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்தார்.

பெண்களே ஹீரோ

பெண்ணுரிமை, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடினார். பெண்களுக்குக் கல்வியும் சுய சம்பாத்தியமும் அவசியம் என்பதை உணர்ந்தார். பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். வானொலி நிலையத்தை ஏற்படுத்தினார். மீடியா ட்ரெயினிங் சென்டர் ஆரம்பித்தார். அது பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வி, பயிற்சி, சுயதொழில் போன்ற பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் மையமாக இருந்து வருகிறது.

காங்கோவில் எந்தப் பகுதியில் இருந்தும் இங்கே தொடர்புகொண்டு தங்களின் பிரச்சினைகளைப் பெண்கள் சொல்லலாம். அவர்களின் பிரச்சினைகளைக் களைவதற்கும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துவதற்கும் நீமாவின் ‘மமன் ஷுஜா’ என்ற திட்டம் உதவுகிறது. அதாவது பெண்களை ஹீரோக்களாக மாற்றும் திட்டம் இது. ஆன்லைனில் இந்தப் பெண்களின் கதைகள் வெளியிடப்பட்டு, உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றைச் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்தி வரும் அமைப்பாக இவை இருக்கின்றன.

அந்த நேரத்தில்தான் நீமாவின் மகள் பாதிக்கப்பட்டார். ஓர் இரவு முழுவதும் நிம்மதியைத் தொலைத்தார். நீண்ட மனப் போராட்டத்துக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தார். மன்னிப்பு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.

“இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களுக்குத் தண்டனை அளித்தால் எல்லாம் சரியாகிவிடுமா? வேறு ஒருவன் வேறு ஒரு பெண் மீது வன்முறை நிகழ்த்திக்கொண்டுதான் இருப்பான். இது இவர்களின் தவறல்ல, இந்த அமைப்பின் தவறு. அமைப்புதான் ஆணி வேர். அதைச் சரி செய்தால் பிறகு எல்லாமே சரியாகும் என்று எனக்குத் தோன்றியது. என் முடிவு சரிதான் என்பது குற்றவாளிகளைக் கண்டபோதே புரிந்துவிட்டது.

தண்டனையைவிட மன்னிப்புக்கு அதிக வலிமை இருக்கிறது. அன்பால் எதையும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மன்னிப்பு கேட்டபோது எனக்கு வந்தது. நரகத்திலிருந்துதான் சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்பது புரிந்தது. கல்வி மூலம்தான் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியும். கல்வி இருந்தால் அமைதியை விரும்புவார்கள், பெண்களை மதிப்பார்கள். அதற்கான முயற்சிகளில்தான் எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது” என்கிறார் நீமா.

உலகின் மோசமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்த காங்கோவில் மனித உரிமைகளும் பெண்கள் உரிமைகளும் மீட்கப்பட்டு வருவதற்கும் அமைதிக்கான முயற்சிகளுக்கும் நீமாவும் அவரது இயக்கங்களும்தான் காரணம். உலக நாடுகளின் பல அதிபர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், சமூகப் போராளிகள், ஹாலிவுட் பிரமுகர்கள் எல்லோரும் நீமாவின் இயக்கத்துக்கு ஆதரவும் நிதியும் அளித்து வருகிறார்கள்.

“காங்கோவை என் அம்மாவைப் போல நேசித்து வருகிறேன். உலக நாடுகளில் காங்கோவுக்கு மரியாதை கிடைக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம். சமூகத்தில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துவது என் நோக்கமல்ல. மிகப் பெரிய முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றே நினைக்கிறேன். செயல்படுகிறேன்” என்று சொல்லும் நீமா, தன் போராட்டம் ஆண்களுக்கு எதிரானதல்ல, சமூக அமைப்புக்கு எதிரானது என்று அழுத்தமாகச் சொல்கிறார்.​

காங்கோமனித உரிமைபெண்ணுரிமைநீமாசமூக ஆர்வலர்

You May Like

More From This Category

More From this Author