Published : 07 Jan 2015 02:37 PM
Last Updated : 07 Jan 2015 02:37 PM

முதலீட்டாளர்களை ஈர்க்க சிவப்பு நாடா முறையை மாநில அரசுகள் ஒழிக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சர் ஜேட்லி வலியுறுத்தல்

மேற்குவங்க உலக முதலீட் டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இரண்டுநாள் மாநாட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது:

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சூழலை மேற்குவங்க அரசு உருவாக்க வேண்டும். வளர்ச்சி நடவடிக்கை களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தரும்.

வெறும் முதலீடுகளை மட்டுமே ஈர்த்தால் போதாது. அம்முதலீடுகளுக்குப் போதுமான லாபத்தைத் திரும்ப அளிக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டும். அவ்வாறு வரும் முதலீடுகள் பெரு முதலீடுகளுக்கு வழி வகுக்கும்.

சில சலுகைகள் இருந்தபோதும் தொழில்நிறுவனங்கள் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறியுள்ளன. மேற்குவங்கத்தை மீண்டும் தொழில் மையமாக உருவாக்குவதுதான் நம்முன் இருக்கும் சவால்.

முதலீட்டாளர்களின் விருப்பம்

முதலீட்டாளர்களுக்கு சுய விருப்பம் உள்ளது. எந்த நாட்டில், எந்த மாநிலத்தில் முதலீடு செய்வது என்பது அவர்களுடைய விருப்பம். எனவே, அவர்களின் விருப்பத்தை இந்தியாவின் மீதும், குறிப்பிட்ட மாநிலத்தின் மீதும் திருப்ப வேண்டும்.

முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டுமெனில் மாநில அரசுகள் தேவையற்ற நிர்வாக நடைமுறைகளை (சிவப்பு நாடா முறை) ஒழிக்க வேண்டும். உலக முதலீட்டாளர்களின் பார்வை நம்மீது உள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டி நிறைந்த கூட்டாட்சி முறை சகாப்தத்தில் நாம் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதன் மூலமே, அரசு அமைத்துக் கொண்டதற்கான இலக்கை நிறைவேற்ற முடியும். அரசியல் மாறுபாடுகளைக் கடந்து மத்திய மாநில அரசுகள் வளர்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும். மாநில அரசுகள் பொதுச் செலவுகளை அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.

நிலக்கரி ஏலத்தால் அதிக பயனடையும் நான்கு மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டால், மேற்கு வங்கத்தின் வருவாய் அதிகரிக்கும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இவ்வாறு ஜேட்லி பேசினார்.

இம்மாநாட்டில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தொழிலதிபர்கள் ஆதி கோத்ரேஜ், ஐடிசி நிறுவனத்தின் சி தேவஸ்வர் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும், செக் குடியரசு, இஸ்ரேல், கொரியா, லக்ஸம்பர்க், அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, வங்கதேசம், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x