Published : 06 Jan 2015 08:51 AM
Last Updated : 06 Jan 2015 08:51 AM

அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை: தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு

அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக் வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மக்கள் தொகைக் கணக்கெடுப் பின் படி, பெரும்பாலும் 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து விட்டோம். இந்த முறை ஒரு இடத்துக்கு அதிகமான இடங்களில் இடம் பெற்றுள்ளவர்களை நீக்க, 2 விதமான திட்டங்களை மேற்கொண்டோம்.

முதலில் பட்டியலில் ஒரே விதமான புகைப்படங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை மென்பொருள் மூலம் கண்டுபிடித்து, அந்த வாக்காளர் முகவரியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, போலியானதை நீக்கினோம். இதேபோல், பெயர்கள், முகவரி ஆகியவற்றை மென்பொருள் மூலம் ஆய்வு செய்து, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெறும் போலி வாக்காளர்களை நீக்கியுள்ளோம். புகைப்பட ஆய்வில் 58 ஆயிரம் வாக்காளர் பெயர்கள் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்டு, கள ஆய்வுக்குப் பின், 15 ஆயிரத்து 736 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதேபோல், பெயர் விவர ஆய்வில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 862 பேர் நீக்கப்பட்டனர்.

ராணுவப் பணியில் இருப்போருக்கு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வசிப்பிட முகவரியில் பெயர்களை சேர்க்கலாம். மேலும் தங்கள் பணியாற்றும் பகுதி முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, திருத்தம் முடிந்து விடவில்லை. எப்போது வேண்டுமானாலும், வாக்காளர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். இது தொடர் நடவடிக்கையாக உள்ளது. முடிந்தவரை ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்க முயற்சித்தால், பட்டியல் மற்றும் வாக்காளர் அட்டையில் தவறுகளைப் பெருமளவு குறைக்க முடியும்.

புதிய வாக்காளர்களுக்கு வரும் ஜனவரி 25-ம் தேதி வாக்காளர் தினத்தில் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்படும். இரண்டாம் கட்டமாக பழைய வாக்காளர்களுக்கு சாதாரண வாக்காளர் அட்டை மாற்றப்பட்டு, ரூ.25 கட்டணத்துடன் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x