Published : 20 Jan 2015 05:48 PM
Last Updated : 20 Jan 2015 05:48 PM

ஒகேனக்கல் பேருந்து விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: அன்புமணி குற்றச்சாட்டு

"ஒகேனக்கல் மலைப்பாதையில் இருந்து அரசுப் பேருந்து கவிழ்ந்து விழுந்து அப்பாவி மக்கள் 7 பேரின் உயிர்கள் அநியாயமாக பறிபோயிருக்கிறது. அரசு போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம்" என்று பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகில் மலைப்பாதையிலிருந்து அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தருமபுரி மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

7 பேரின் உயிரைப் பறித்த இந்த சோக விபத்துக்கு காரணம் அரசுப் பேரூந்து சரியான நிலையில் இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. தருமபுரியில் இருந்து ஓகேனக்கலுக்கு சென்ற பேரூந்தில் 62 பேர் பயணம் செய்தனர். கணவாய் என்ற இடத்தில் குறுகிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது பேரூந்தை ஓட்டுனரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், ஓட்டுனர் எவ்வளவோ முயன்றும் பேரூந்து சரியான நிலையில் இல்லாததால் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு மலைப்பாதையிலிருந்து 100 அடிக்கும் அதிக ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாகவும், தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் தருமபுரி மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.தருமபுரி பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்திற்குட்பட்ட தருமபுரி மண்டல பொது மேலாளரை சந்தித்து இது குறித்து முறையீடு செய்த போதிலும் இந்த குறைகளை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இயக்குவதற்கு லாயக்கற்ற நிலையில் பேருந்துகள் இருப்பதை சுட்டிக்காட்டிய போதிலும், பயணிகளின் பாதுகாப்பைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவற்றை இயக்கும்படி தங்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அப்பாவி மக்கள் 7 பேரின் உயிர்கள் அநியாயமாக பறிபோயிருப்பதை மன்னிக்கவே முடியாது. இந்த விபத்துக்கும், அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கும் தமிழக அரசும் ஆட்சியாளர்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

பேருந்துகளைப் போலவே சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளன. தமிழக சாலைகளின் நிலை குறித்து சென்னை உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்குத் தொடர்ந்து அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதில் இருந்தே அரசின் பொறுப்பின்மையை அறிய முடியும். இதற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சாலை விபத்துக்களில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்கும், அமைச்சர் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் செல்லும் வாகனங்கள் கூட விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவதற்கும் தமிழக அரசு வெட்கித் தலை குனிய வேண்டும்.

ஒகேனக்கல் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அதேபோல் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x