Published : 16 Jan 2015 02:36 PM
Last Updated : 16 Jan 2015 02:36 PM

சென்னை வரும் அமித் ஷா ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளரை அறிவிப்பாரா?- கட்சியினர் எதிர்பார்ப்பு

நாளை மறுநாள் சென்னை வரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடைபெறவுள்ள திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும் வருகிறார்கள்.

அவர்கள் அனைவருக்கு தமிழக பா.ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பா.ஜனதா தலைவர் அமித் ஷா சமீபத்தில் சென்னை வந்த போது, தமிழக பா.ஜனதாவை பலப்படுத்த பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் முன்னிலையில் நடிகர் நெப்போலியன், இசை அமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், அமித் ஷா 2–வது முறையாக நாளை மறுநாள் சென்னை வருகிறார். அவரை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சந்திக்கிறார்கள். அப்போது ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று தமிழக பா.ஜனதா ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை நாளை மறுநாள் அமித் ஷா வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. நாளை மறுநாள் சென்னை வரும் அமித் ஷா ஸ்ரீரங்கம் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்பார் என்றும் பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x