Published : 02 Jan 2015 03:17 PM
Last Updated : 02 Jan 2015 03:44 PM
மும்பை மத்திய ரயில்வே சேவைக்கு உட்பட்ட ரயில்கள் தொடர்ந்து தாமதமாக வருவதை கண்டித்து பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது பயணிகள் சிலர் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மும்பை மத்திய ரயில்வேயின் உள்ளூர் சேவை ரயில்கள் தொடர்ந்து தாமதாக வருவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையும் திவா ரயில் நிலையத்துக்கு உள்ளூர் ரயில் தாமதமாக வந்து சேர்ந்தது. அலுவலக நேரத்தில் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது ஒரு தரப்பினர் ரயில்கள் மீது கற்களை எரிந்ததால் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது கல்வீச்சில் ரயில் ஓட்டுநர் காயமடைந்தார்.
இதனால் திவா ரயில் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. விரைந்து வந்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட பயணிகள் மீது லேசான தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.
பயணிகள் போராட்டத்தால் மும்பையில் 6 மணி நேரத்துக்கு மேல் ரயில் சேவை முடங்கியது. தானே - சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் இடையேயான ரயில் சேவைகளும் தாமதமானது.
ரயில் ஓட்டுநர் தாக்கப்பட்டதை கண்டித்து ரயில்வே ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். பின்னர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
இது குறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபத்நாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "திவா ரயில் நிலைய போராட்டத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தியுள்ளேன்.
ரயில்கள் தாமதாமாவது குறித்தும் ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் பாபுவிடம் பேசப்பட்டது. இனி இத்தகைய சூழல் ஏற்படாமல் இருக்க பார்த்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்ர்.