விருதுநகர் மாவட்டத்தில் 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தலா ரூ.4 லட்சம் தமிழக அரசு நிவாரணம்
ஈஸ்வரன், சக்திவேல்

ஈஸ்வரன், சக்திவேல்

Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ஆறுமுகசாமி. இவர் மீனம்பட்டி அருகே சுந்தர்ராஜபுரத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (பெசோ) உரிமம் பெற்று வடிவேல் பைரோடெக் என்ற பெயரில்பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

நேற்று காலை தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது உலர்களத்தில் காய வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் கலவையான மணி மருந்தில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

அதன் அருகே மரத்தடியில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தவர் மீது தீ பட்டு, பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இந்த விபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மற்றொரு விபத்து: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டியில் சந்தனபாண்டியன் என்பவருக்கு சொந்தமான மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற ஹரிஷ்மா ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் நேற்று காலை மருந்து கலவையின்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் அய்யம்பட்டி சிலோன் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் சக்திவேல் (55) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கங்காகுளத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் காளிராஜ் (50) சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கங்காகுளத்தை சேர்ந்த பவானி (49), மகாலட்சுமி (36), கருப்பாயி (57), இருளாகி (70) ஆகியோர் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்: இதற்கிடையே முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘வெடிவிபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>ஈஸ்வரன்,&nbsp;சக்திவேல்</p></div>
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதல்வர் விஜய்க்கு அஜித் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in