

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்கு ஆவணம் தொடர்பாக பெண் எஸ்ஐ, ஏட்டு இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இந்த சம்பவத்தில் பெண் எஸ்ஐ, ஏட்டு மற்றும் காவலர் ஒருவரை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம். சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் மணிமேகலை. இவரது கணவர் வழக்கறிஞர். புகார் தொடர்பாக வந்த மனு மீது வழக்கு பதியாமலேயே அந்த வழக்கு ஆவணத்தை எஸ்ஐ மணிமேகலை அவரது கணவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஏட்டு ராஜன்பாபு, எஸ்ஐ மணிமேகலையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த 7-ம் தேதி தகராறு ஏற்பட்டு, இருவரும் காவல் நிலைய வளாகத்திலேயே கட்டிப்புரண்டு சண்டையிட்டதாக தகவல் வெளியானது.
இச்சம்பவம் நடந்தபோது, காவலர் ஏழுமலை காவல் நிலையத்தில் இருந்துள்ளார். ஆனால், இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அவர் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் போலீஸார் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தகவல் வெளியான நிலையில், எஸ்ஐ மணிமேகலை, ஏட்டு ராஜன்பாபு மற்றும் காவலர் ஏழுமலை ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷானாஸ் உத்தரவிட்டுள்ளார்.