

அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் வடமாநில ஐஸ் வியாபாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 95 பேர் காயமடைந்தனர்.
சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது குன்றக்குடி ஆதீன மடத்துக்குட்பட்ட பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. 5 நிலை நாட்டார்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சுவிரட்டு விமரிசையாக நடைபெறும்.
இதை முல்லைமங்கலம், சதுர்வேதமங்கலம், கண்ணமங்கலம், சீர்சேர்ந்த மங்கலம், வேழமங்கலம் ஆகிய 5 நிலை நாட்டார்கள் சேர்ந்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.
அதன்படி, நேற்று கோயிலில் சிறப்பு வழிபாடு முடிந்து மஞ்சு விரட்டு திடலுக்கு நாட்டார்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தியதும் மற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டுகள் அணிவித்தனர்.
தொடர்ந்து சிவகங்கை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 128 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 70-க்கும்மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். இதை ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர். முன்னதாக ஆங்காங்கே வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன.
மாடுகள் முட்டியதில் புதுக்கோட்டை மாவட்டம் அரப்பன்வயலைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (34), மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த ராமநாதன் (23), ஐஸ் வியாபாரியான ராஜஸ்தானைச் சேர்ந்த ஜமால்லால் ஜி (55) ஆகிய மூவர் உயிரிழந்தனர். 95 பேர் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த 18 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிங்கம்புணரி வட்டாட்சியர் நாகநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஏற்பாடுகளை கண்காணித்தனர். 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.