

புதுக்கோட்டை: கீரமங்கலத்தில் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்டதும், சமயோசிதமாக செயல்பட்டு பெரிய அசம்பாவிதத்தைத் தடுத்த 3 சிறுவர்களின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.சதீஷ்(28). இவர் கீரமங்கலம் தர்மர் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
2 வாரங்களுக்கு முன்பு சதீஷ் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், அவரது மனைவி வீட்டைப் பூட்டிவிட்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்தப் பூட்டிய வீட்டின் ஜன்னல் வழியாக அடர்ந்த புகை மூட்டமும் தீப்பொறியும் வெளியேறுவதை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்களான பரணிதரன்(15), சர்வேஷ்வரன்(14) மற்றும் விபுசாய்(14) ஆகியோர் கவனித்துள்ளனர்.
ஆபத்தை உணர்ந்த அச்சிறுவர்கள், உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். ஆனால், அவர்களிடம் செல்போன் இல்லை.
அருகில் பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையில், சற்றும் தாமதிக்காத சிறுவர்கள், அங்கிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ள தீயணைப்பு நிலையத்தை நோக்கி ஓடினர். சாலை வழியாகச் சுற்றிச் சென்றால் காலதாமதமாகி தீ பரவிவிடும் என்பதை சமயோசிதமாக உணர்ந்த மூவரும், வழியில் இருந்த உயரமான தடுப்பு வேலியைத் தாண்டிச் சென்றனர்.
அவர்கள் தீயணைப்பு நிலையத்தை அடைந்து தகவல் தெரிவித்ததும், தீயணைப்பு படையினர் உடனடியாக வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
சிறுவர்களின் மின்னல் வேகச் செயல்பாட்டால் பக்கத்து வீடுகளுக்கு தீ பரவ வாய்ப்புள்ள பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, அந்த 3 சிறுவர்களையும் ஊர் பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் வெகுவாக பாராட்டினர். இந்த 3 சிறுவர்களும் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.