

தமிழக பக்தரையும் அவரது வயதான தாயையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய குருவாயூர் தனியார் விடுதி, ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கேரள நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆவடியைச் சேர்ந்த பாபு கணேஷ், தனது 70 வயது தாயார் கவுரி நாராயணனுடன் 2009-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றார். அன்றிரவு 10 மணிக்கு அங்குள்ள விருந்தாவன் டூரிஸ்ட் ஹோம் என்ற தனியார் விடுதியில் 2 படுக்கை வசதி கொண்ட அறையை 24 மணி நேர வாடகைக்கு எடுத்து தங்கினார். இதற்காக, ரூ.350 வாடகை கட்டணமாக செலுத்தினார். 13-ம் தேதி இரவு 10 மணிக்கு அவர் அறையை காலி செய்யவேண்டும்.
மறுநாள் காலை பாபு கணேஷ் தனது தாயாருடன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, பகல் 12 மணிக்கு விடுதிக்கு வந்தார். மதியம் 2 மணிக்கு விடுதி நிர்வாகத்தினர் வந்து அறையை காலி செய்யுமாறு கூறியுள்ளனர். அதற்கு பாபு, ‘கோயிலுக்கு சென்று வந்ததால் வயதான அம்மா சோர்வாக இருக்கிறார். இரவு 10 மணி வரை அவகாசம் இருக்கிறது. அதற்குள் காலி செய்யச் சொல்கிறீர்களே’ என கேட்டுள்ளார்.
ஆனால், விடுதி நிர்வாகத்தினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால், அங்குள்ள காவல்நிலையத்தில் பாபு புகார் தெரிவித்தார். போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வேறு வழியின்றி அறையை காலி செய்துவிட்டு ரயிலில் சென்னை வந்துவிட்டார். ஆனால், விடுதி நிர்வாகம் நடந்துகொண்ட விதம் வேதனையை ஏற்படுத்தியதால், திருச்சூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் பாபு கணேஷ் வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பத்மினி சுதீஷ், உறுப்பினர்கள் ஷீனா, சந்திரகுமார் ஆகியோர் இவ்வழக்கை விசாரித்தனர்.
விடுதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மனுதாரர் அறையை வாடகைக்கு எடுக்கும்போது, மறுநாள் மதியம் 3 மணிக்கு காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, விடுதி உரிமையாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மனுதாரரை காலி செய்யுமாறு விடுதி நிர்வாகம் தெரிவித்தது’’ என்றார்
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘குருவாயூர் நகராட்சி வழங்கியுள்ள உரிமத்தில், விடுதியில் அறை எடுத்து தங்கினால், அவர்கள் 24 மணி நேரத்துக்கு பிறகே காலி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. விடுதியில் பராமரிக்கப்படும் ரிஜிஸ்டர் புத்தகத்தில், எந்த இடத்திலும் மதியம் 3 மணிக்கு அறையை காலி செய்ய வேண்டும் என குறிப்பிடப்படவில்லை’’ என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் விடுதி நிர்வாகம் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டுள்ளது. சிறிதும் மனிதநேயம் இன்றி வயதான தாயாருடன் மனுதாரரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது நிரூபணம் ஆகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.2,500-ம் விடுதி நிர்வாகம் வழங்க வேண்டும்’’ என தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பாபு கணேஷ் கூறும்போது, ‘‘விடுதி நிர்வாகம் நடந்து கொண்ட விதம் என் மனதை மிகவும் பாதித்தது. என்னைப் போல் மற்றவர்கள் யாரும் பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் வழக்கு தொடர்ந்தேன். தற்போது சபரிமலை சீசன் என்பதால், தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குருவாயூர் செல்வர். இத்தீர்ப்பின் மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும்’’ என்றார்.