Published : 17 Jan 2015 09:27 AM
Last Updated : 17 Jan 2015 09:27 AM

புறநகர் ரயில் பயணச்சீட்டுகளை மொபைல் போன் மூலம் பெறும் வசதி: தெற்கு ரயில்வே அறிமுகம்

புறநகர் பயணச்சீட்டுகளை மொபைல் போன் மூலம் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை மொபைல் போன் மூலம் பெறு வதற்கான வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சாப்ட்வேரை ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக, ‘ஆர்-வேலட்’ என்ற கணக்கு தொடங்கப்படும். தற்போது, சென்னை கடற்கரை, எழும்பூர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தை தொடங்குபவர்கள் மட்டுமே இப்புதிய சேவையின் மூலம் பயணச்சீட்டுகளை பெற முடியும்.

பயணிகள் தங்களுக்கு தேவையான பயணச்சீட்டுகளை ‘ஆர்-வேலட்’ என்ற கணக்கின் மூலம் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், மேற்கண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தில் தாங்கள் பதிவு செய்த பயணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவற்றை பயணத்தின் போது உடன் கொண்டு செல்ல வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.indianrail.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது 9840931998 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

புதிய ரயில் சேவை

கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சென்னை சென்ட்ரல்-விசாகப்பட்டினம் புதிய வாராந்திர ரயில் சேவையை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நாளை (18ம் தேதி) சென்னையில் தொடங்கி வைக்கிறார். இந்த அறிமுக ரயில் (வண்டி எண்.02802) நாளை மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

வழக்கமான ரயில் சேவை வரும் 23ம் தேதி முதல் விசாகப் பட்டினத்தில் இருந்தும், 24ம் தேதி முதல் சென்னையிலிருந்தும் தொடங்குகிறது. இதன்படி, வண்டி எண்.22801 விசாகப்பட்டினத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 9.35 மணிக்கு வந்து சேரும்.

வண்டி எண்.22802 சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x