Published : 14 Jan 2015 01:32 PM
Last Updated : 14 Jan 2015 01:32 PM

பெண்ணை கொன்று பணம், நகை கொள்ளை: 2 குழந்தைகளுக்கு கத்திக்குத்து; ஓட்டல் ஊழியர் கைது

அம்பத்தூரில் பெண்ணை கொலை செய்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த ஓட்டல் ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

அம்பத்தூர் துளசி தெருவில் வசிப்பவர் மைக்கேல்ராஜ். அவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். அவரது ஓட்டலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த விக்னேஷ்வரன் (21) என்பவர் வேலை பார்த்துவந்தார். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்காக மைக்கேல்ராஜிடம் அவர் பணம் கேட்டுள்ளார். மைக்கேல்ராஜ் பணம் கொடுக்க மறுக்கவே விக்னேஷ்வரன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் விக்னேஷ்வரனை அழைத்த மைக்கேல்ராஜ், வீட்டில் இருக்கும் மனைவி ஆரோக்கிய வனிதா(25) மற்றும் குழந்தைகள் டென்னிஸ் (5), பிரின்சிகா (2) ஆகியோருக்கு இரவு உணவை கொடுத்து அனுப்பினார். வீட்டுக்கு சென்று உணவை கொடுத்த விக்னேஷ்வரன், வனிதாவிடமும் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல பணம் கேட்டிருக்கிறார். அவரும் கொடுக்க மறுக்கவே ஆத்திரம் அடைந்த விக்னேஷ்வரன், அனிதா அணிந்திருந்த தாலி செயினை பறித்தார். அவர் அபயக்குரல் எழுப்பியதால் கத்தியை எடுத்து அனிதாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

தங்கள் கண் முன்னால் தாய் கொலை செய்யப்பட்டதை பார்த்து குழந்தைகள் அழுது துடித்தனர். விக்னேஷ்வரன் அவர்களையும் கத்தியால் குத்தினார். குழந்தைகள் மயங்கி விழுந்ததும், அவர்கள் இறந்துவிட்டதாக நினைத்து அப்படியே விட்டுவிட்டு வீட்டிலிருந்த ரூ.45 ஆயிரம் பணம், அனிதா அணிந்திருந்த 7 பவுன் நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்து சென்றுள் ளார்.

ஓட்டலை மூடிவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பிய மைக்கேல்ராஜ், அங்கு தனது மனைவி மற்றும் குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கதறித் துடித்தார். அவரது சத்தத்தைக் கேட்டபிறகே அருகே இருந்தவர்களுக்கு கொலை நடந்த விவரம் தெரிந்துள்ளது. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் டென்னிஸை அரசு பொது மருத்துவமனையிலும், பிரின்சிகாவை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையிலும் அனுமதித்துள் ளார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மயில்வாகனன், உதவி ஆணையர் ராஜேந்திரகுமார், ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் போலீஸார் விரைந்து வந்தனர். வனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மைக்கேல்ராஜின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தபோது, அதில் விக்னேஷ்வரன் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைவைத்து போலீஸார் அவரைத் தேடினர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றிக்கொண்டிருந்த விக்னேஷ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொலை வழக்கில் கைதான விக்னேஷ்வரன், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x