Published : 20 Jan 2015 09:03 AM
Last Updated : 20 Jan 2015 09:03 AM

வாக்குச்சாவடிகள் வாரியாக ஸ்ரீரங்கத்தில் ஆய்வு நடத்தப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு

போலி வாக்காளர்கள் குறித்து வந்துள்ள புகாரையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்குச்சாவடி வாரி யாக ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதி காரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் சந்தீப் சக்சேனா நேற்று கூறியதாவது:

ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வர்கள், இறந்தவர்கள் என்ற அடிப் படையில் 9 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விசாரிக்கு மாறு, மாவட்டத் தேர்தல் அதிகாரி யான ஆட்சியருக்கு அறிவுறுத்தி யுள்ளோம்.

தற்போது தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு விட்டதால், வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்ய முடியாது. அதேநேரம், திமுக அளித்துள்ள புகாரின் பேரில் வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு நடத்தி, போலி பெயர்கள் கண்டறியப்பட்டால் அவர்களது பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டு தேர்தல் நாளில் வாக்குச்சாவடியில் வைக்கப்படும். அந்தப் பட்டியலை பயன்படுத்தி யாரும் வாக்களிக்க முடியாது. இது வழக்கமான நடைமுறைதான்.

ஸ்ரீரங்கம் தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளருக் கான செலவுக்கணக்கு மேற்பார்வை யாளராக ஸ்ரீதர தோரா நியமிக்கப் பட்டுள்ளார். இவர் தொகுதிக்குச் சென்று பணிகளைத் தொடங்கி விட்டார். தேர்தல் பார்வையாளராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 25-ம் தேதிக்குள் தொகுதிக்கு வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்.

தேர்தலையொட்டி ஸ்ரீரங்கத்தில் கூடுதலாக 4 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 8 மணி நேரத்துக்கு ஒரு குழுவினர் சுழற்சி முறையில் ரோந்து மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபடுவர். 25 (ஞாயிறு) 26 (குடியரசு தினம்) தேதிகளில் விடுமுறை என்பதால், அன்றைய தினம் மனு தாக்கல் செய்ய முடியாது.

சமீபத்தில் நடந்து முடிந்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது, தமிழகம் முழுவதும் 2.54 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் புகைப்படங்களை ஸ்கேன் செய்து, ஒரே மாதிரியான புகைப்படம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை கண்டு பிடித்து வாக்காளர் பெயர்களை நீக்கியுள்ளோம். இந்த முறையை தமிழகம் முழுவதும் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர் பெயர்கள் சீரமைப்பு

தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் ஒரே மாதிரியாக இல்லாமல், எழுத்து வடிவில் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. திருச்சியை எடுத்துக்கொண்டால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என தமிழில் பல வகையிலும், Trichy என்று ஆங்கிலத்தில் வேறு வகையிலும் பயன்படுத்துகின்றனர். இதனால் வாக்காளர் பட்டியலில் குழப்பம் ஏற்படுகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை எழுத்து வடிவில் ஒரே மாதிரியாகப் பயன்படுத்த, தமிழக நிதித்துறைச் செயலர் தலைமையில் தமிழக அரசு ஒரு ஆய்வுக் கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டி ஊர்ப் பெயர்களை ஒரே சீராகப் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யும். அதன்பிறகு, அந்தப் பெயர்கள் அடிப்படையில் அனைத்து வாக்காளர்களின் முகவரியும் சீராக மாற்றப்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் நீக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x