Last Updated : 09 Jan, 2015 08:48 AM

 

Published : 09 Jan 2015 08:48 AM
Last Updated : 09 Jan 2015 08:48 AM

இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்புடைய கல்லூரி மாணவர் உட்பட மூன்று பேர் கைது: சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா?

கர்நாடக மாநிலம் கார்வார் அருகே இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய கல்லூரி மாணவர் உட்பட 3 பேரை பெங்க‌ளூரு தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர்களுக்கும் பெங்களூரு மற்றும் சென்னை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 28-ம் தேதி பெங்களூ ருவில் உள்ள‌ சர்ச் தெருவில் சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதில் சென்னையை சேர்ந்த பவானிதேவி (38) பலியானார். அவருடைய உற‌வினர் கார்த்திக் (21) உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

தனிப்படை

இச்சம்பவம் குறித்து விசாரிக்க பெங்களூரு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் அலோக் குமார் தலைமையில் 3 தனிப்பிரிவு அமைக்கப்பட்டது. மேலும், தேசிய புலனாய்வு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, தமிழக சிபிசிஐடி போலீஸார் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தியன் முஜாகிதீன் உறுப்பினர்களா?

பெங்களூரு தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை இந்தியன் முஜாகிதீன் அமைப் புடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் கர்நாடகம் தவிர தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் மத்தியப்பிரதேசம், புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங் களிலும் விசாரணை நடத்தினர்.

தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த யாசின் பத்கல் உட்பட பலரிடம் தீவிர விசா ரணை நடத்தினர்.

இதன் அடிப்படையில் பெங்களூருவில் உள்ள காக்ஸ் டவுனில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது ஆட்சேபத்துக்குரிய சில பொருட்களும், லேப்டாப், செல்போன், சில முக்கிய தொலைத் தொடர்பு கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கார்வார் மாவட்டம் பத்கலில் உள்ள வீட்டில் சோதனையிட்ட போது அம்மோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர், எலக்ட்ரிக் டைமர்கள், இரும்பு பைப்கள், வேறு சில வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பொருட் களைக் கொண்டு சக்தி குறைந்த வெடிகுண்டை தயாரிக்க முடியும். எனவே, அவற்றை சோதனைக்காக தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இதையடுத்து வெடிப் பொருட்களை பதுக்கி வைத் திருந்த பத்கலை சேர்ந்த சையத் இஸ்மாயில் அஃபாக்(34), சதாம் ஹூசேன்(31) மற்றும் எம்பிஏ படிக்கும் கல்லூரி மாணவர் அப்துஸ் சபுயூர் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு சம்பவத்துடன் தொடர்பு?

பத்கலில் கைது செய்யப்பட்ட வர்கள் பல்வேறு தடை செய்யப் பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் உறுப்பினர்களா என்பது உறுதி யாகவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம்.

பத்கலில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்களுக்கும் பெங் களூரு, சென்னையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப் பட்ட வெடிப்பொருட்களுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே, தனிப்படை போலீஸார் அந்த கோணத்திலும் விசாரித்து வரு கின்றனர். விசாரணையின் முடிவில் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தெரியவரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x