

தமிழகத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.3,500 ஆக்க வேண்டும் என்று தமாகா(மூ) தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை டிசம்பர் மாத இறுதிக்குள் நிர்ணயிக்கப் படுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஜனவரி மாதம் பிறந்து விட்ட போதிலும், இதுவரை கரும்புக்கான ஆதார விலை நிர்ணயிக்கப்படவில்லை. மேலும் கரும்புக்கான ஆதார விலையை நிர்ணயிக்க கரும்பு விவசாயிகள், ஆலை உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இப்படி பேச்சுவார்த்தை நடத்தாததால் ஆலை உரிமையாளர்கள் விவசாயி களுக்கு கொடுக்க வேண்டிய விலையை கொடுக்க மறுக்கின்ற னர்.
ஏற்கெனவே உரம், மின்சாரம் போன்றவை உயர்ந்துள்ள நிலையில், கரும்புக்கான விலை யாக ரூ.2,300 முதல் ரூ.2,400 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.இதுமட்டுமன்றி மத்திய அரசு நிர்ணயித்தபடி கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,200 மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் சர்க்கரைத்துறை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய 400 கோடி ரூபாயும் இதுவரை தரப்படவில்லை.இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே கரும்பு விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.3,500 ஆக நிர்ணயிக்க வேண் டும். மேலும் நிலுவை தொகையை பெற்றுத்தரவும் முயற்சி மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.