அப்துல் கலாமின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர்கள் யார்?- கலாமின் அண்ணன் மகள் எழுதிய நூலில் புதிய தகவல்கள்

அப்துல் கலாமின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர்கள் யார்?- கலாமின் அண்ணன் மகள் எழுதிய நூலில் புதிய தகவல்கள்
Updated on
1 min read

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர்கள் குறித்த புதிய தகவல்கள், கலாமின் அண்ணன் மகள் எழுதி வெளியாக உள்ள ‘ஆல விருட்சம்’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர், சிறந்த ஆசிரியர் என அனைவராலும் அறியப்பட்ட ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில், படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்தார்.

பள்ளிக் கல்வியை ராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தொடங்கி, ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளி பொறியியல் படிப்பையும் படித்தார்.

அப்துல் கலாம் தனது சுயசரிதையான ‘அக்னிச் சிறகுகள்’ நூலில், தமது பள்ளி நாட்களில் சைக்கிளில் வீடுவீடாகச் சென்று காலை வேளையில் பேப்பர் போட்டு வருமானம் ஈட்டியதையும், கல்லூரியில் சேர்வதற்கான கட்டணத்தை கட்ட முடியாமல் சிரமப்பட்டபோது தமது சகோதரி அசிம் ஜொகரா தனது நகைகளை அடமானம் வைத்து, அவரை கல்லூரியில் சேர்த்துவிட்டதையும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கலாமின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர்கள் குறித்த மேலும் புதிய தகவல்கள் கலாமின் அண்ணன் மகள் முனைவர் நசீமா மரைக்காயர் எழுதி வெளியாக உள்ள ஆல விருட்சம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆல விருட்சம் நூலில், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல் நிலைப் பள்ளியில் கலாம் படித்தபோது அவருக்கு பள்ளிக் கட்டணத்தை கட்டியவர் கலாமின் அண்ணன் முத்து மீரா லெப்பை மரைக்காயரின் நண்பர் பெரியகருப்பன் அம்பலம் எனவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியல் பயில ராமேசுவரம் பொடெல் பாதிரியாரும், சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளி பொறியியல் பயில ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் சண்முகநாத சேதுபதியும் இடம் வாங்கிக் கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார்.

ராமேசுவரத்தில் கலாமின் வீட்டில் இயங்கும் அருங்காட்சிய கத்தின் மேலாளராக பணியாற்றும் முனைவர் நசீமா மரைக்காயர் இதற்கு முன்பு ‘எங்கள் குடும்ப மருத்துவம்’, ‘திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆல விருட்சம் இவரது மூன்றாவது நூல்.

இந்த நூலில் சிறு வயதில் அப்துல் கலாம் என்னென்ன குறும்புத்தனங்கள் செய்தார் என்ற பல குதூகல மான செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் ராமேசுவரம் கோயில், கச்சத்தீவு அந்தோணியார் திரு விழா, ஆபில்-ஹாபில் தர்கா, மீனவர்கள் என பல்வேறு தகவல்களும் இடம்பெற்றுள்ள தால் ராமேசுவரம் தீவு மக்கள் இந்தப் புத்தகத்தின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in