

தனியார் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க கடைகளுக்கு அளித்துவரும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த ஆவின் முடிவெடுத்துள்ளது. இதற்காக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய முகவர்களை நியமிக்கும் பணி நடைபெறுகிறது.
ஆவின் ஒரு நாளைக்கு 21 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. சென்னையில் 11.50 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது. மொத்த விற்பனை முகவர்கள் மூலம் 4 லட்சம் லிட்டர் பால் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் ஆர்வத்துடன் முன்வந்து ஆவினுக்கு பால் சப்ளை செய்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சீர்கேடுகளை களையவும், சில்லரை விற்பனையை அதிகரிக்கவும் கூடுதல் முகவர்களை நியமிக்க ஆவின் முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஆவின் உயரதிகாரிகள், கூறியதாவது:
சென்னையில் தற்போது, 32 மொத்த விற்பனை முகவர்கள் இருந்து வருகின்றனர். இவர்களில் பலர் 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்கள். அதன்பிறகு, மூன்றாண்டுக்கொருமுறை பதிவைப் புதுப்பித்து வருகின்றனர். கடைகளில் ஒரு லிட்டர் பால் விலை (உதாரணத்துக்கு புளூ பாக்கெட்) ரூ.37-க்கு விற்கப்பட வேண்டும். அதனை முகவர்களுக்கு ரூ.35.50-க்குக் கொடுக்கிறோம். அவருக்கு ஒரு ரூபாய் கமிஷன் கிடைக்கும். அதனை அவர், கடைக்காரர் 50 காசு லாபம் வைத்து விற்பதற்காக 36.50-க்கு கடையில் கொடுக்க வேண்டும். இதுபோக, போக்குவரத்துச் செலவுக்கு லிட்டருக்கு 27 காசும் முகவருக்குத் தரப்படுகிறது. அதாவது, ஒரு லிட்டர் பாலுக்கு முகவருக்கு, 1.77 காசு கிடைத்து வருகிறது. இவர்களால் கடை விற்பனையை அதிகரிக்க இயலவில்லை. அதனால் புதிய முகவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. சென்னையில் உள்ள 3 மண்டல துணைப் பொது மேலாளர்களிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்பட யார் வேண்டுமானாலும் மனு கொடுக்கலாம். ஆனால், பெயரளவுக்கு மனு செய்வோரைத் தவிர்ப்பதற்காக, இந்த பணியில் ஈடுபட்டிருப்போர் மூலமாக, புதிய முகவர்களை தெரிவு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 100 டப் (1200 லிட்டர் பால்) கண்டிப்பாக வாங்க வேண்டும் (4 நாட்களுக்கான டெபாசிட்டை முன்னதாக செலுத்த வேண்டும்). பான்கார்டு, முகவரி அத்தாட்சி ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். ஏற்கெனவே முகவர்களாக இருப்பவர்கள் பால் சப்ளை செய்யும் பகுதிகளுக்குச் சென்று இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இந்த நிபந்தனைகளை ஏற்பவர் மட்டும் முகவராக மனு செய்யலாம்.
ஆவின் ஆய்வின் விளைவு
எங்களது ஆய்வில், நிர்ணயித்ததைவிட அதிக விலைக்கு விற்கப்படுவது, போதிய அளவு சப்ளை இல்லாமை ஆகியவையே கடைகளில் ஆவின் பால் விற்பனை தொய்வடைய காரணம் எனத் தெரியவந்தது. அதனால் கடைகளில் பால் சப்ளை அதிகரிக்கப்படவுள்ளது. சப்ளை அதிகரித்தால், தேவை குறையும். அதனால் விலையும் ஏறாது. தற்போது, பால் கொள்முதல் ஒரு நாளைக்கு 21 லட்சம் லிட்டரில் இருந்து 26.5 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. கடைகளுக்கான தினசரி சப்ளையை 11.5 லட்சம் லிட்டரிலிருந்து 14 லட்சம் வரை அதிகரிக்கவுள்ளோம். அதற்காக, எத்தனை முகவர்கள் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.