

நாட்டின் பொருளாதார பயங்கரவாதத்தை தடுப்பதில் சுங்கத்துறைக்கு முக்கியமான பொறுப்பு இருக்கிறது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுங்க தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இந்தியாவில் குடியரசு தினம் என்பதால், ஜனவரி 27-ம் தேதி சர்வதேச சுங்க தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை மண்டல தலைமை அலுவலகத்தில் சர்வதேச சுங்க தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சுங்கத்துறை ஆணையர் மாயங்க் குமார் வரவேற்புரை ஆற்றினார். தலைமை ஆணையர் எஸ்.ரமேஷ் சுங்கத்துறையின் செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் தற்போதுள்ள சவால்களை பற்றி விரிவாக பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பேசியதாவது:
தமிழகத்தில் பல்லவர் ஆட்சி காலத்தில் சுங்கத்துறை உருவாக் கப்பட்டு, வரிவிதிப்பது உள்ளிட்ட வாணிப பணிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால், தற்போது உலக மயமாக்கல் காரணமாக தொழில் வளர்ச்சி பல மடங்கு அதிகரித் துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வாணிப நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால், தற்போது சவால் களும் அதிகரித்துள்ளன. சுங்கத் துறையில் அதிநவீன தொழில் நுட்பங்களை அதிகமாக பயன் படுத்த வேண்டும். அப்போதுதான் மனிதர்களால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க முடியும்.
ஒரு நாட்டின் மீது ஆயுதங் களைக் கொண்டு போர் நடத்துவது மட்டுமே பயங்கர வாதமல்ல, மறைமுகமாக நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப் பதும் மற்றொரு பயங்கரவாதம் தான். பொருளாதார பயங்கர வாதத்தை தடுக்க சுங்கத்துறைக்கு முக்கியமான பொறுப்பு உள்ளது. சுங்கத் துறையில் சட்டப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் மற்றவர்கள் உங்களை பார்த்து வெறுப்படையும் அளவுக்கு அது மாறக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் புதுப்பிக்கப்பட்ட சுங்கத்துறையின் புதிய இணையதளத்தை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தொடங்கிவைத்தார். சென்னை சுங்கத்துறை ஆணையர் (மேல்முறையீடு) எஸ்.கண்ணன் நன்றி கூறினார். இந்த விழாவில் சுங்கத்துறை அதிகாரிகள், வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.