

நமது மாணவர்கள் தரமான கல்வியைத் தேடி வெளிநாடு களுக்குச் செல்வதால் இந்தியப் பணம் வீணாக வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்படுகிறது என வேலூர் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி ஜி.விசுவநாதன் பேசியது:
இளைஞர்களால்தான் இந்தி யாவை தலைநிமிரச் செய்ய முடியும். உலகின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரம் இந்தியாவைச் சார்ந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பக் கல்வியால் உலக நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுகின்றன. இன்றைய இந்தியா இளைஞர்களை நம்பியே இருக்கிறது. இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி, அறிவி யல் தொழில்நுட்பக் கல்வியை வழங்க வேண்டும். நமது மாண வர்கள் தரமான கல்வியைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதனால் இந்திய பணமும் வீணாக வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்படுகிறது. இந்தியாவில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது. இது தேசிய வியாதியாக உள்ளது.
இந்நிலை மாற கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கான வசதி, வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கித் தர வேண்டும் என்றார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் சு.நடராஜன் வரவேற்றார். விழாவில் 1,047 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.
மேற்கத்திய கல்விமுறை
காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பத்மஸ்ரீ ரெனனா ஜாப்வாலா பேசியதாவது:
நமது நாட்டில் காந்திய சிந்தனைக்கு மாறாக, மேற்கத்திய கல்விமுறையைக் கடைப்பிடித்து வருவதால் அனைவருக்கும் வேலைவாய்ப்பை அளிக்க முடியவில்லை. தற்போது பொருளாதார வளர்ச்சி மேலிருந்து கீழாக வருகிறது. இந்நிலை மாறி கிராமப்புறங்களில் இருந்து தொடங்கும் மேல்நோக்கிய வளர்ச்சி அமைய வேண்டும். இதற்கு தேவையான கல்வியை அளிக்க வேண்டும் என்றார்.