Published : 06 Jan 2015 04:59 PM
Last Updated : 06 Jan 2015 04:59 PM

தேனி நியூட்ரினோ மையத்துக்கு ஒப்புதல்: பணிகள் இனி வேகமெடுக்கும் என விஞ்ஞானிகள் கருத்து

தேனி பொட்டிதட்டியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கும், அது தொடர்பாக மதுரையில் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக நியூட்ரினோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அணுவுக்குள் எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்களைத் தவிர மிகச்சிறிய, மின்சுமையற்ற நியூட்ரினோ என்ற துகள்களும் இருப்பதாக 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அணுவுக்குள் மட்டுமல்ல இயற்கையாகவே கோடானுகோடி நியூட்ரினோக்கள் மழைபோல் கொட்டிக் கொண்டிருப்பதாகவும், அதனை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரியனின் சூட்சுமத்தையும், பிரபஞ்ச ரகசியத்தைக் கண்டறியலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதனால், உலக நாடுகளைப்போலவே இந்திய அரசும் நியூட்ரினோ ஆய்வுப்பணியில் ஆர்வம் காட்டிவருகிறது. இதற்காக தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் உள்ள ஒரே கல்லால் ஆன மொட்டைமலையில் ஐ.என்.ஓ. எனப்படும் நியூட்ரினோ மையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

அதேபோல மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எதிரே உள்ள வடபழஞ்சியில் உயர் இயற்பியல் ஆய்வு மையம், வகுப்பறைகள், விஞ்ஞானிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திரமோடி இத்திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐ.என்.ஓ. திட்ட இயக்குநர் நபா கே.மாண்டல் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில், ரூ.1500 கோடி மதிப்பிலான நியூட்ரினோ திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அனுமதி வழங்கியுள்ளார். பொட்டிபுரம் கிராமம் அருகே மலையைக் குடைந்து பூமிக்கு அடியில் உலகத்தரமான நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு உலகிலேயே மிகப்பெரிய மின்காந்தம் நிறுவப்படும். இதன் மூலம் தமிழகத்திலும் இந்தியாவிலும் இளம் விஞ்ஞானிகள் பலர் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த மையத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி., டெல்லி பல்கலைக்கழகம் மும்பை பாபா அணுசக்தி கழகம் உள்ளிட்ட 21 கல்வி நிறுவனங்களும் ஆய்வில் ஈடுபடும்.

தென்மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் வடபழஞ்சியில் அறிவியல் மையமும் நிறுவப் படும். பொட்டிபுரம் மற்றும் மதுரை வடபழஞ்சியில் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். பிரதமரின் அனுமதி கிடைத்துள்ளதால், இனி இந்தப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x