

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி நேற்றைய தினம் தமிழகம் முழுவதுமுள்ள வைணவ கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பங்கேற்க நேற்று அதிகாலை 2 மணியிலிருந்தே பக்தர்கள் கோயிலுக்கு வரத்தொடங்கினர். வைகுண்ட ஏகாதசியின் முதல் நிகழ்வாக காலை 2.30 மணியளவில் உற்சவருக்கு முத்தங்கி சேவை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலை 4 மணியளவில் மகா மண்டபத்தில் காட்சி தந்த உற்சவருக்கு, வைர அங்கி சேவையும் நடத்தப்பட்டது. இதையடுத்து, பெருமாளை, கோயிலின் உட்பிரகாரத்தில் எடுத்து வந்து அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசலில் கொண்டு வந்து சேர்த்தனர்.
அதிகாலை 4.35 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படவே, பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற குரல் எழுப்பி பக்தி பரவசத்துடன் பெருமாளை தரிசித்தனர். இதைத்தொடர்ந்து, நம்மாழ்வாருக்கு காட்சி தரும் நிகழ்வும், பிறகு அதிகாலை 4.30 மணியிலிருந்து 5 மணி வரை வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தல் மற்றும் திவ்யபிரபந்தம் வேதமும் ஓதப்பட்டது.
மேலும் அதிகாலை 5.10 மணியிலிருந்து 5.45 மணி வரை திருவாய்மொழி மண்டபத்தில் 3 சுற்றுக்கள் உற்சவர் பக்தி உலாவும், தொடர்ந்து திருவாய்மொழி மேல்மண்டபத்தில் உள்ள புண்ணியகோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது.
காலை 6 மணியளவில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கு பக்தர்கள் ரூ.100 செலுத்தி கோபுரத்தின் பின்வாசல் வழியாகவும், கட்டணமின்றி தரிசிக்க கோபுரத்தின் முன்வாசல் வழியாகவும் வந்தனர். இரவில் உற்சவர் அலங்கார திருமஞ்சனம், நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடந்தது.
இந்த வைகுண்ட ஏகாதசியையொட்டி, கடந்த டிசம்பர் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பகல்பத்து நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து, நேற்றைய தினம் முதல் வரும் 11-ம் தேதி வரை இராப்பத்து நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது.
புத்தாண்டு நாளன்று வைகுண்ட ஏகாதசியும் வந்ததால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமிருந்தது.