Published : 09 Jan 2015 12:50 pm

Updated : 09 Jan 2015 12:50 pm

 

Published : 09 Jan 2015 12:50 PM
Last Updated : 09 Jan 2015 12:50 PM

தமிழில் அரசியல் திரைப்படம் சாத்தியமா?

சத்யஜித் ராய்க்கு அடுத்து இந்திய சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவரின் ‘எலிப்பத்தாயம்’ மிகவும் பேசப்படுகிற படம். எனக்கு அடூரின் ‘முகாமுகம்’ படத்தை 1990-ல் ஒரு திரைப்பட விழாவில் காண வாய்த்தது.

ஈகா தியேட்டரில் மொத்தம் 10 பேர் இருந்திருப்போம் (அதில் மூன்று ஜோடிகள்!). மிக மெதுவாக நகர்ந்த இந்தப் படத்தை காலி இருக்கைகள் நடுவே உட்கார்ந்து தனியாகப் பார்த்தது மிகவும் பாரமாக இருந்தது. மனம் கனமானதன் காரணம் புரிய வருடங்கள் பிடித்தன.


தூர்தர்ஷன் தயவால் மற்ற பிராந்திய மொழிப் படங்களை ஆங்கில மொழிபெயர்ப்பு வாங்கியங்களுடன் பார்க்கும் பழக்கம் எனக்கு இருந்தது. மிருணாள் சென், புட்டண்ணா கனகல், அரவிந்தன், ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹலானி, மணி கவுல், ரித்விக் கட்டக், நரசிங்க் ராவ், கிரீஷ் காசரவல்லி, கேத்தன் பரேக், புத்ததேவ் தாஸ்குப்தா எல்லாம் அறிமுகமானது தூர்தர்ஷனால்தான்.

கலைப் படங்கள் என சொல்லப்பட்டவற்றைப் பார்க்கும் பழக்கம் இருந்ததால் ‘முகாமுகம்’ எனக்குக் களைப்பைத் தரவில்லை. ஆனால் கதாநாயகனின் மன ஆளுமையின் பிரதிபலிப்பாகப் பார்வையாளனான எனக்கு அந்தக் கனமான வெறுமை ஏற்பட்டது எனப் பின்னர் நினைத்துக்கொண்டேன்.

கேரள அரசியலின் ஒரு முக்கிய கால கட்டத்தைப் பதிவுசெய்த படம் முகாமுகம்.

ஐம்பதுகளில் ஒன்றுபட்டிருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் உள்ளூர் தலைவராகவும், தொழிற்சங்கவாதியுமான ஸ்ரீதரனுக்கும் ஓடுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் முதலாளிக்கும் சண்டை. முதலாளி கொலை செய்யப்பட, பழி ஸ்ரீதரன் மேல் விழுகிறது. தலைமறைவாகிறான் அவன். காலம் கடந்தும் திரும்பாததால் எல்லோரும் அவன் இறந்ததாகக் கருதுகின்றனர். கட்சி அவனுக்குச் சிலை வைக்கிறது. மெல்ல அவனை எல்லோரும் மறந்து போகிறார்கள்.

பத்து வருடங்கள் கழித்துத் திரும்பி வருகிறான் ஸ்ரீதரன். இந்த இடைக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. மார்க்ஸிஸ்ட்கள் ஆட்சியைப் பிடித்திருந்தார்கள். அவனுடன் பணியாற்றியவர்கள் பெரிய தலைவர்கள் ஆகியிருந்தார்கள்.

முதலில் மிரட்சியுடன் அவனைப் பார்க்கும் அவன் குடும்பமும் ஊரும், பின்னர் அவனைக் கேள்விக்குறியுடன் பார்க்கின்றன. சதா குடித்தும் தூங்கியும் பொழுதைக் கழிக்கும் ஸ்ரீதரன் எதுவும் பேசுவதில்லை. ஒரு பெரும் கதாநாயகனாக அவனைப் பார்த்திருந்த மக்கள், அவனை வைத்து என்ன செய்ய என்று தெரியாமல் யோசிக்கின்றனர்.

வந்து பார்க்கும் கூட்டமும் குறைகிறது. கட்சிப் பிரமுகர்களும் அவன் வரவை ரசிக்கவில்லை. கடைசியில் ஸ்ரீதரன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான். கட்சி அவனைத் தியாகி எனக் கொண்டாடி கோலாகலமாக வழி அனுப்புகிறது.

அரசியல் நீரோட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் நீர்த்துப் போவதையும், கொள்கை வீரர்களான இளைஞர்கள் எப்படிச் சுயநலமான தலைவர்களாக உருமாறுகிறார்கள் என்றும், மக்களின் ஆதர்ச நாயகன்கூட அவர்கள் தேவைக்குப் பயன்படாதபோது எப்படித் தூக்கி எறியப்படுகிறான் என்றும் பல இழைகளில் காட்சி அனுபவமாக ஒரு பெரும் அரசியல் படமாக இதைப் படைத்திருக்கிறார் அடூர் கோபாலகிருஷ்ணன்.

சொற்ப வசனங்கள், யதார்த்த நடிப்பு, அளவான இசை, உள்ளதை உள்ளபடி மட்டும் உணர்த்தும் காட்சிகள், கூர்மையான விமர்சனத்தைக்கூடக் காட்சியாகக் காட்டும் உத்தி என இந்தப் படம் சினிமா பார்த்தலில் ஒரு கற்றல் அனுபவத்தைத் தந்தது. அடூர் கோபாலகிருஷ்ணனை ஏன் உலகம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது எனப் புரிந்து கொண்டேன்.

இந்தப் படத்துக்கு அந்த வருடத்துக்கான தேசிய விருது கிடைத்தது. ‘சிறந்த திரைக்கதை’ விருது. கங்காதரன் நாயர் அவ்வளவாக அறியப்படாத நடிகர். அவர்தான் நாயகன் வேடமேற்றிருந்தார். கவியூர் பொன்னம்மாவின் தேர்ந்த நடிப்பு நல்ல இணை. திலகனும் அசோகனும் வெகுஜனப் படங்களில் சோபித்ததற்கு இது போன்ற படங்களின் அனுபவம் நிச்சயம் கை கொடுத்திருக்கும்.

மனித மனதின் விசித்திரங்களையும், சமூக மனதின் செயல்பாடுகளையும், இரண்டிலும் உள்ள அரசியலையும் இந்தப் படம் பேசுகிறது. இதை அரசியல் விமர்சனப் படம் என்றும் சொல்லலாம்.

தன்னைச் சுய ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளாத சமூகம் சீர்கெடும். இந்தப் படத்தைப் பற்றி யோசிக்கையில் தற்காலத் தமிழ்ச் சமூகத்தை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. தமிழ்ச் சூழலில் இதைவிட சத்தான சமூக, அரசியல் நிகழ்வுகள் உண்டு. ஆனால் எடுக்கும் சூழல் இல்லை.

அரசியல் செய்திகளையும் நிலைப்பாடுகளையும் தந்திரமாகச் சொல்லும் படங்கள் தப்பித்து விடுகின்றன. ஆனால் வெளிப்படையாகத் தத்துவார்த்தமான விமர்சனத்தை எதிர்கொள்ளும் நிலையில் தமிழர்கள் இல்லை. அல்லது தமிழக அரசியல்வாதிகள் அதை அனுமதிப்பதில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் எனத் தத்துவார்த்தமாகப் பிரிந்து செயல்பட்ட கட்சிகள் மற்றும் அதைச் சார்ந்த மனிதர்களிடம் இங்கு முக்கால் நூற்றாண்டுக் கதைகள் உள்ளன. இன்று பெருகிவரும் இந்துத்துவா, தனித் தமிழர் அமைப்புகள், ஜாதிக் கட்சிகள் கதைகளுக்கும் பஞ்சமில்லை. அதைச் செவ்வனே சொல்லத்தக்க படைப்பாளிகளும் இங்கு உள்ளனர். சந்தேகமேயில்லை.

ஆனால் எடுத்த பின் படத்தை வெளியிட முடியாது. இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம் என்பதே ஒரு அரசியல் கதைக்கான களமாக எனக்குத் தெரிகிறது!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

அடூர் கோபாலகிருஷ்ணன்அரசியல் திரைப்படம்கம்யூனிஸ்ட்மார்க்ஸிஸ்ட்கள்கேரளாமுகாமுகம்

You May Like

More From This Category

More From this Author