Published : 30 Apr 2014 05:11 PM
Last Updated : 30 Apr 2014 05:11 PM

மே தினம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தொழிலாளர்களின் மேன்மையை பறைசாற்றும் மே தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா:

"தொழிலாளர் சமூகத்துக்கு என் இதயம் கனிந்த மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்துக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழிலாளர்கள் ஆற்றும் சேவையை நாம் மதிக்க வேண்டும்.

தொழிலாளர் சமூகத்தின் உரிமைகளை உயர்த்தி பிடிப்பதிலும், அவர்களுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதிலும் வேலைச் சூழல்களை மேம்படுத்துவதிலும் நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்."

முதல்வர் ஜெயலலிதா:

"உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகக் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை அவர்களிடையே வேறுபாடு இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே.

உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்."

திமுக தலைவர் கருணாநிதி:

"அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் 1890 மே முதல் நாளன்று நடைபெற்ற பேரணியில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப்பலி தந்து பெற்ற உரிமை வரலாற்றை நினைவுறுத்தும் நாள் இந்த மே தினம்!

நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கியது; ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கியது; உழைப்பாளி வர்க்கம் ஓய்வு நேரங்களில் கண்டுகளிக்க இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது; 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கிப் பசிப்பிணி போக்கியது; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு

அடுப்புகள் வழங்கியது எனத் தமிழகத்தில் வாழும் தொழிலாளர் சமுதாயம் நலம்பெறுவதற்குத் தேவையான மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி "தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக திகழ்ந்தது - திகழ்கிறது - என்றும் திகழும் இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்தான்" என்பதனை நினைவுபடுத்தி, தொழிலாளர் சமுதாயம் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்தி இந்த மே தின நன்னாளில் எனது நல்வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் உரித்தாக்குகிறேன்."

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினம். தமிழகத்தில் படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

வேலையில்லாத் திண்டாட்டத்தோடு, விலைவாசி உயர்வும் சேர்ந்து வறுமையில் வாடும் நிலையை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. வறுமையை ஒழித்து, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம்."

மதிமுக பொதுச் செயலர் வைகோ:

" 'தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம்' என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.

மனிதகுல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள்.

இப்போது நம் கண்ணெதிரே இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்து, கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை நடத்தி விட்டது. இக்கோரக் கொலைகளை நடத்திய ராஜபக்சேயின் மண்டைக் கொழுப்புக்கும், மாபாதகத்துக்கும் மரண அடி கொடுக்க அனைத்து நாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப, கொடியோனைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க, மனித உரிமை உணர்வுடையோர் அனைவரையும், மே தினம் அறைகூவி அழைக்கிறது.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தோனுக்கு சங்காரம் நிசமெனத் தாய்த் தமிழகத்துப் பாட்டாளி வர்க்கமும்,இளையோர் கூட்டமும் சூளுரைக்கட்டும்!"

பாமக நிறுவனர் ராமதாஸ்:

"இந்தியாவில் சென்னையில் தான் முதன்முதலில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், தமிழராகிய சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் தான் இதைக் கொண்டாடினார் என்பதும் தமிழர்களாகிய நமக்கு பெருமையாகும்.

தொழிலாளர்களுக்கு உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுதலை கிடைத்துவிட்ட போதிலும், பொருளாதார சுரண்டலில் இருந்து விடுதலை கிடைக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கவில்லை. தொழிலாளர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் முடங்கிக்கிடக்கின்றன. இணைந்து போராட இந்த நாளில் தொழிலாளர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்."

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:

"அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறும் நலன்களைப் போலவே அமைப்பு சாரா அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் காப்பீடு, மருத்துவவசதி மற்றும்ஓய்வூதியத்திட்டங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்கும் சட்டம், வேலை செய்யும்

இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை காங்கிரஸ் நடைமுறைப்படுத்தி உள்ளது. அனைத்து தொழிலாளர் சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மே தின வாழ்த்துக்கள்."

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன்:

"தண்ணீர்த் தட்டுப்பாட்டிலிருந்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியும் மே தின நாளைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம்.

உழைக்கும் மக்களின் உரிமைக் குரலை எழுப்பிய புரட்சிகர நாளை, புத்துலகு படைக்க வேண்டும் என்ற புத்துணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும்."

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன்:

"பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழிற்சாலைகளில் இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகூட மறுக்கப்படுகிறது. ஆளும் அரசுகள் உள்நாட்டு தொழிலாளர்களை விட பன்னாட்டு முதலாளிகளுக்கே ஆதரவாக உள்ளன. சட்ட, சமூக பாதுகாப்பு எதுவுமில்லாத முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூக அநீதிகளை சாய்த்து சமநீதியை உறுதிசெய்வோம்.தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த மேதின நன்னாளில் சூளுரைப்போம்."

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்:

"தொழிலாளர்கள் மற்றும் இதர உழைக்கும் வர்க்கத்தை 8 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கவோ, அவர்களின் உழைப்பையும் ஆற்றலையும் சுரண்டவோ கூடாது என்கிற வரையறையை வகுத்த நாளே மே. ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கும் நிலையில் தொழிலாளர்கள் இங்கே கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை மீட்டெடுக்க வேண்டியதும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதும் சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரின் கடமையென இந்த மே நாளில் உறுதியேற்போம்."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x