Published : 19 Jan 2015 08:54 AM
Last Updated : 19 Jan 2015 08:54 AM

ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக செல்போன்களில் புதிய ‘சேஃப்டி அப்’ அப்ளிகேஷன் அறிமுகம்: நாடு முழுக்க 6 மாதத்தில் செயல்படுத்தப்படும்- ரயில்வே அமைச்சர்

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்தக் கூடிய ‘சேஃப்டி அப்’ என்ற அப்ளிகேஷன் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதத்தில் நாடு முழுவதும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா வரவேற்புரை ஆற்றினார். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் டி.கே.ரங்கராஜன், எஸ்.ஆர்.விஜய்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புதிய ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் காமாக்யா பிரீமியம் ஏசி விரைவு ரயில் குறித்து அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:

தெற்கு ரயிவேயில் மட்டுமே தினமும் 2.3 கோடி பேர் பயணம் செய்கின்றனர். விரைவு மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் பயணம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரயில் நிலையங்களை தூய்மைப்படுத்துதல், சீரான இயக்கம் உள்ளிட்டவை ரயில்வேயின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

சரக்கு போக்குவரத்து வருவாயை பெருக்குவதன் மூலம் பயணிகளின் வசதிகளுக்காக அதிகம் செலவிட முடியும். அதற்காக நாடு முழுவதும் புதிய ரயில் திட்டங்களை அறிவிப்பதுடன் ரயில் பாதைகளையும் நீட்டிக்க வேண்டும். தற்போது இருவழிப்பாதை திட்டங்களை மேற்கொள்ள ரூ.690 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் நிதிச்சுமை அதிகமாக இருக்கிறது. அதிக முதலீடுகள் தேவைப்படுகின்றன.

செங்கல்பட்டு விழுப்புரம் இடையே இரட்டை வழிபாதை அமைக்கும் பணியில் 2 கி.மீ தூரம் மட்டுமே பாக்கி இருக்கிறது. இது விரைவில் முடிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அப்போது, ரயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்தக் கூடிய ‘சேஃப்டி அப்’ எனும் அப்ளிகேஷன் மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் நாடு முழுவதும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரூ.41 கோடி செலவில் 40 ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் அதிகரிக்கப் பட்டு பாதுகாப்பு பணிகள் பலப் படுத்தப்பட்டு வருகின்றன. சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளும் நடக்கின்றன. பெண்களுக்கு தனிப் பிரிவு உரு வாக்கப்பட்டு, புகார்கள் மீது உடனுக்குடன் ரயில்வே போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் மாநில அரசுகளுடன் இணைந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரகின்றன. அதன்படி, தமிழக அரசுடன் இணைந்து ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் சுரேஷ் பிரபு பேசினார்.

புதிய ரயிலின் நேரம்

புதியதாக தொடங்கப்பட்டுள்ள விசாகப்பட்டினம் சென்னை அதிவேக விரைவு ரயில் (22802), சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 9.10க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் விசாகப்பட்டினத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (22801), மறுநாள் காலை 9.35க்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x