

தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தும் வீதி நாடகங்களை கண்டு ரசிக்க குடும்பத்துடன் மக்கள் சென்ற காலம் மறைந்தேவிட்டது எனலாம்.
தேசப்பற்று, இறை நம்பிக்கை, சுய மரியாதை ஆகியவற்றை பறைசாற்றி, மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய தெருக்கூத்து கலைஞர்கள், நவீனமயமாக்கலின் ஆதிக்கத்தால் நாடகத் தொழிலை விட்டு விலகி, கூலித் தொழிலா ளர்களாக உருவெடுத்துள்ளனர். ஆனாலும், அழிந்து வரும் தெருக்கூத்து கலையையும் கலைஞர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக தெருக்கூத்து கலையில் ஈடுபட்டு வரும் திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் கிராமத்தில் வசிக்கும் முத்தமிழ் கலை மன்ற நிறுவனர் ஆ.தே.முருகையன் கூறியதாவது:
சித்திரை மற்றும் ஆடி மாதம் என்றால் தெருக்கூத்து கலைஞர்களைப் பிடிக்கவே முடியாது. ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடகங்கள் அரங்கேற்றப்படும். படித்தவர்கள், பாமர மக்கள் என்று அனைத்து தரப்பினரும் விரும்பி பார்த்த காலம் அது. குறைந்த ஊதியம் என்றாலும் நிறைவாக இருந்தது. காலப்போக்கில் தெருக்கூத்துக் கலை நலிவடைந்துவிட்டது.
தெருக்கூத்து கலைஞர்கள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 10 சதவீதமாக குறைந்துவிட்டது. ஈச்சம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன், தனக்குக் கிடைத்த ஆசிரியர் வேலையைத் துறந்து தெருக்கூத்து கலையை விரும்பி ஏற்றுக்கொண்டார். இப்போது, அப்படி செய்ய ஆளில்லை.
தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்கள் வாழ வேண்டும் என்றால், அரசு உதவ வேண்டும். அரசு நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் வாய்ப்பு கொடுத்தால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஓய்வூதியம்
ஓய்வூதியம் கேட்டு 60 வயதைக் கடந்த ஆயிரக்கணக்கான கலைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். கலைப் பண்பாட்டுத் துறையினர் துரிதமாக ஆய்வு செய்து ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
தெருக்கூத்து கலைஞர்கள், ஆர்வமுள்ள தங்கள் வாரிசுகளுக்கு இந்தக் கலையை கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், தெருக்கூத்து கலையை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.