

யுடிவி நிறுவனத்தின் தென்னகப் பிரிவின் தலைவர் கோ. தனஞ்செயன் எழுதிய ‘வெள்ளித் திரையின் வெற்றி மந்திரங்கள்’ நூலை நடிகர் கமல்ஹாசன் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதை நடிகர் நாசர் பெற்றுக்கொண்டார்.
ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் இந்நூல் வெளியிடப்பட்டது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் சமகாலத் தமிழ் சினிமாவை விரிவாக அலசுகிறது.
“ஆங்கிலத்தில் எவ்வளவுதான் அலசல்களும் தகவல்களும் வந்தாலும் தமிழில் வரும்போது அவற்றின் வீச்சும் தாக்கமும் அளப்பரியதாக உள்ளது” என்று நூலாசிரியரிடம் குறிப்பிட்ட கமல்ஹாசன், ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தொடர்ந்து எழுதுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இதழியல் பணிகளையும் கமல்ஹாசன் பாராட்டினார்.
‘தி இந்து’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் தனஞ்செயன் எழுதிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பான ‘வெள்ளித் திரையின் வெற்றி மந்திரங்கள்’, இன்றைய திரையுலகின் சாதக பாதகங்களை நுட்பமாக அலசுகிறது. திரைத் துறையின் பிரச்சினைகளையும் சிறப்புகளையும் அலசும் இந்தக் கட்டுரைகள் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிகழ்ச்சியின்போது தனஞ்செயன் எழுதிய ‘த பிரைட் ஆஃப் தமிழ் சினிமா’ ஆங்கில நூலையும் கமல்ஹாசன் வெளியிட நாசர் பெற்றுக்கொண்டார்.