

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக்மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா பலாத்காரம் செய்ததாகவும், இதில் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது ஆசிக் மீரா திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிக் மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), சந்திரபாபு (54), சரவணன் (35) ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய் தனர். இந்த 4 பேரும் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சத்தியப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆசிக் மீராவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிக் மீராவும், துர்கேஸ்வரியும் நேரில் ஆஜராகினர். ஆசிக் மீரா சத்தியப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில், எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும் துர்கேஸ்வரி என்னை தீவிரமாகக் காதலித்தார். நானும் அவரை காதலித்தேன். துர்கேஸ்வரியை தாலிகட்டி என்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டேன்.
நான் துணை மேயரானதும் சொத்தில் பங்கு கேட்டு துர்கேஸ்வரி மிரட்டினார். இந்நிலையில் துர்கேஸ்வரி கர்ப்பமுற்று பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர் எனது அரசியல் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக புகார் அளித்தார். இதனால் நான் துணைமேயர் பதவியை இழந்தேன்.
இருப்பினும் கணவர் என்ற முறையிலும், குழந்தையின் தந்தை என்ற முறையிலும் பழையபடி குடும்பம் நடத்த அழைத்தும் துர்கேஸ்வரி வர மறுத்துவிட்டார். நான் எந்த காலத்திலும் எனது மனைவியான துர்கேஸ்வரியுடன் குடும்பம் நடத்த தயாராக இருக்கிறேன் என்றும், எங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு நான்தான் தந்தை என அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:
ஆசிக்மீரா, துர்கேஸ்வரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது துர்கேஸ்வரி முஸ்லிம் மதத்துக்கு மாற ஒத்துக்கொண் டுள்ளார். ஆசிக் மீரா தன்னை பகிரங்கமாக திருமணம் செய்து, ஜமாத்தில் பதிய வேண்டும் என துர்கேஸ்வரி கேட்டுக்கொண்டுள் ளார். துர்கேஸ்வரியை சட்டப்படி திருமணம் செய்துகொள்வதாகவும், அவரையும், குழந்தையையும் பராமரிப்பதாகவும் ஆசிக் மீரா ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஆசிக் மீராவுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 2 வாரம் மதுரையில் தங்கி, மதுரை காந்தி மியூசியத்தில் சேவையாற்ற வேண்டும். மேலும், விசாரணைக்கு அழைக்கும்போது போலீஸ் முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. தலைமறைவாகக் கூடாது என உத்தரவிட்டார்.