Published : 30 Apr 2014 05:57 PM
Last Updated : 30 Apr 2014 05:57 PM

ஏற்காட்டில் தவிக்கும் விலங்குகளுக்கு தாராளமாக உணவளிக்கும் தொழிலதிபர்

ஏற்காட்டு மலையில் வசிக்கும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு சேலம் தொழிலதிபர் ஒருநாள் விட்டு ஒருநாள் உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

சேலம் அருகே உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டியாக போற்றப்படுகிறது. கோடை காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து செல்கின்றனர்.

ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை குரங்குகள் அதிகளவில் வசிக்கின்றன. மலைப்பாதைகளில் சுற்றித்திரியும் குரங்குகளை ரசித்தபடியே சுற்றுலா பயணிகள் மலைக்கு செல்வார்கள். கோடையில் இந்தாண்டு சேலத்தில் 100 முதல் 106 டிகிரி வரை வெப்ப நிலை நீடிக்கிறது. கடும் வெப்பம் காரணமாக ஏற்காடு மலையின் பெரும்பகுதி மரம், செடி கொடிகள் காய்ந்து சருகாக காட்சியளிக்கிறது. இதனால் மலையிலுள்ள காட்டெருமைகள், குரங்குகள், மான் உள்ளிட்டவை உணவுக்காகவும், குடிநீருக்காகவும் தவிக்கின்றன.

கோடை காலத்தில் குரங்குகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை பழங்கள், தண்ணீர் அளிக்கின்றனர். இதுபோதுமானதாக இல்லை. இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மினிடோர் வேன் மூலமாக 2000 ரூபாய் மதிப்புள்ள பழம், தண்ணீரை ஏற்காடு மலைப்பகுதிக்கு கொண்டு சென்று ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கி வருகிறார். மலைப்பாதையில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. தர்பூசணி, வாழைப்பழம், ஆரஞ்சு, முலாம்பழம் உள்ளிட்டவை வைக்க

படுகிறது. காட்டெருமை, மான் களுக்கு உணவு அளிக்க க்கூடாது என்பதால் அடிவாரத்தில் இருந்து குரும்பம்பட்டி வரையிலான பகுதியில் தண்ணீரை தொட்டியில் நிரப்பிச் செல்கின்றனர்.இதன்மூலம் குரங்குகள், விலங்குகள் கோடையை சமாளித்து வருகின்றன. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "கோடை வெயிலில் உணவு தேடி அலையும் வனவிலங்குகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஏப்., முதல் ஜூன் 15-ம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர், பழங்களை வாகனங்கள் மூலம் ஏற்காடுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளேன். மற்றவர்களும் இதேபோல, தங்களால் முடிந்த உதவியை செய்வதால் இயற்கையின் ஏமாற்றத்தை ஓரளவு சரி செய்யலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x