

பாக்ஸ்கான் ஆலையை திறக்கக் கோரி தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலை, கைப்பேசியின் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த ஆலை கடந்த டிசம்பர் மாதம் தனது உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதனால் சுமார் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிஐடியு, தொமுச மற்றும் அண்ணா தொழிற்சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் பாக்ஸ்கான் ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் எழிலரசன் கூறும்போது “கடந்த ஓராண்டில் பாக்ஸ்கான் ஆலையில் பணிபுரிந்த சுமார் 6000 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். தற்போது நிரந்தர தொழிலாளர்கள் உட்பட 1700 பேருக்கு வேலை இல்லை என்று நிர்வாகம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களுக்கு வேலை தருமாறு தொழிலாளர் நலத்துறை கூறியும் இன்னமும் ஆலையை திறக்கவில்லை. இந்த சட்டவிரோதப் போக்கை தடுத்து நிறுத்தி, இளைஞர்களுக்கு வேலை வழங்க மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் கூறும்போது, “உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வரும் பாக்ஸ்கான் நிறுவனம் 12 லட்சம் தொழிலாளர்களை கொண்டுள்ளது. அப்படிப்பட்ட நிறுவனத்துக்கு 1700 தொழிலாளர்களை பணியில் வைத்துக் கொள்வது சுமையாக இருக்க முடியாது,” என்றார்.
பாக்ஸ்கானில் பணிபுரியும் புவனேஸ்வரி கூறும்போது, “நான் ஏழு ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்படிப்பு முடித்தவுடனேயே ரூ.2800 சம்பளத்தில் பாக்ஸ்கானில் வேலைக்கு சேர்ந்தேன். கடைசியாக ரூ.14ஆயிரம் சம்பளம் வாங்கினேன். எனக்கு வேறு எந்த நிறுவனத்துக்கும் சென்று வேலை தேடும் அளவுக்கு கல்வித் தகுதி கிடையாது. மேற்கொண்டு படிக்க வசதி, வாய்ப்புகளும் கிடையாது. எனவே இந்த தொழிற்சாலையை தொடர்ந்து இயக்கி எங்களுக்கு வேலை வாய்ப்பு தரவேண்டும்” என்றார்.