

சவுதி மன்னர் அப்துல்லா மரணத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கா, மதினா ஆகிய இரு புனித இறை இல்லங்களின் பராமரிப்பாளரும் சvuதி அரேபிய மன்னருமான அப்துல்லாவின் மறைவுக்கு தமுமுக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
செல்வ வளம் மிகுந்த ஓர் அரசின் ஆட்சியாளர் என்பதைவிட உலக முஸ்லிம்களின் புனிதத் தலங்களின் பராமரிப்பாளர் என்ற அளவில் சவுதி மன்னருக்கு உலக அரங்கில் சிறப்பிடம் உண்டு. அவர் வாழ்நாளில் அந்தப் பணிகளை சிறப்புடன் நிறைவேற்றினார். இதனால் உலக முஸ்லிம் சமூகத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் பெருமளவில் பெற்றவர்.
மன்னர் அப்துல்லா, இந்தியத் திருநாட்டின் நட்பினை உயர்வாகக் கருதினார். இந்தியப் பயணத்தின் போது "இந்தியாவை தனது மற்றுமொரு தாய்வீடாகக் கருதுகிறேன்" என்று மனம் நெகிழ்ந்து கூறியவர்.
பாதிக்கப்பட்ட பாலஸ்தீனம் மற்றும் சோமாலியா உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு வாரி வாரி வழங்கிய கருணை உள்ளம் கொண்டவர். உலக சமாதானத்திற்கு குறிப்பாக அரபுலகில் பதட்டம் தணிய மன்னர் அப்துல்லா அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
அன்னாரின் மறைவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சவுதி குடிமக்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.